மலைக்கு பயணம்போய் வந்த கதை

இலங்கை பயணம் பகுதி – 1
நினைவு 1 : நீண்டு கிடந்த லயத்தில்* எங்கள் வீட்டு முன்னால் ஒரு சரக்கொன்றை மரம் தழைந்து நிற்கும். வசந்த காலங்களில் அதன் பூக்கள் பொன்னிறமாக பூத்து மரம் முழுதும் பூக்களே சூழ்ந்திருக்கும். காலஞ்சென்ற என் பெரியப்பா குழந்தையாக இருந்த என்னை அவர் தோளில் தூக்கி வைத்துகொண்டவாறு அண்ணாந்து எக்கி நின்று என்னை பூக்களை பிடுங்க சொல்வார். எப்படியோ ஓரிரு பூக்களாவது நான் பறிக்காமல் என்னை அவர் கீழே விடமாட்டார். அந்த பூக்கள் என் கைக்கு அகப்பட என் சிரிப்பில் அந்த லயமே திரும்பி பார்க்கும். எங்கள் வீட்டின் முகவரியாக நின்ற அந்த மரமும் மகிழ்வும் இன்னமும் என் நினைவில் அப்படியே உள்ளது.
நினைவு 2 : பதுளை அளுக்குவத்த மலையிலிருந்து கம்பி வழியாக (வின்ச் முறை) கொழுந்து மூட்டைகள் நத்தைபோல ஊர்ந்து போகும். அது போய் சேருமிடம் பணிய* உள்ள கோட்டகுடை தேயிலை தொழிற்சாலை என நினைவு .நான் வானத்தை அடிக்கடி அண்ணாந்து பார்ப்பேன். ஆர்வத்துடன் நான் மூட்டைகளை தேடுவதை பார்க்கும் பெரியப்பா தண்டோரா போடாத குறையாக லயத்திற்கே சொல்லி பெருமை பட்டுக் கொள்வார். வானத்தை அதிகம் அண்ணாந்து பார்க்க வைத்த அந்த வின்ச் கம்பி இன்னமும் என் நினைவிலும் அதில் கொழுந்து மூட்டைகள் நகர்ந்து கொண்டும் உள்ளன.
நினைவு 3 : எங்கள் லயத்தில் ‘தொங்கவீட்டில் ‘ உள்ள குடும்பத்துடன் எங்கள் வீட்டினருக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது. நாங்கள் அங்கே போவதும் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதும் தினந்தோறும் நடக்கும் ஓன்று. ஏதாவது ‘கொடுக்கல் வாங்கல் ‘ இருந்துகொண்டேயிருக்கும். நானும் அலைந்துகொண்டேயிருப்பேன் இரண்டு வீட்டுக்கும். அந்த வீட்டு ஆயாவின் உதடு என் கன்னத்தில் முத்தம் பதிக்காத , என்னை உருவி நெட்டி முறிக்காத நாள் குறைவுதான். கோடிபுறங்களில் விளையாடும் என்னை தூக்கிகொண்டு போய் பீங்கான் தட்டில் சோறு போட்டு கொடுக்கும், இடியாப்பம் தரும் , ஆட்டுக்கால் ரொட்டி தரும். நான் சாப்பிடுவதை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டேயிருக்கும். அம்மா சில நேரங்களில் திட்டுவாள் …பிறகு கண்டுகொள்ள மாட்டாள். அந்த லயத்தில் நீண்ட நாள் என் நினைவில் தங்கியிருந்த முகம் அந்த ஆயா.
நினைவு 4 : பின்னொரு நாளில் எங்கள் வீடே அழுகையும் ஒப்பாரி சத்தமாகவும் இருந்தது. பெரிய லாரி ஓன்று வீட்டின் அருகில் உள்ள சாலையில் நிற்க தட்டுமுட்டுசாமான்களை அதில் சிலர் ஏற்றிகொண்டிருந்தனர். அம்மாவின் இடுப்பிலிரிருந்த என்னை தூக்கி யார் யாரோ முத்தமிட்டு கொண்டிருந்தனர் . அவர்கள் எல்லோரையும் விட சின்னபொட்டு அத்தைதான் என்னென்னவோ சொல்லி என்னை பார்த்தவாறு அழுதுகொண்டேயிருந்தாள் . எங்கள் வீட்டு சூரா நாயை யாரோ ஒருவரிடம் அப்பா பிடித்து கொடுத்துக்கொண்டிருந்தார். பிறகு பேருந்தோ ரயிலோ நினைவில்லை மலைகளும் மரங்களும் என்னைவிட்டு நகர்ந்து எதிர்திசையில் போய்கொண்டிருந்தது . தொடர்ந்து கேட்டு கொண்டிருந்த அழுகை சத்தத்தின் ஊடாக அம்மாவின் மடியில் தூங்கிபோனேன். இலங்கை என்றதும் தெளிவாகவோ ,மங்கலாகவோ என் மனத்திரையில் ஓடுகிற காட்சிகள் இவை .
அந்த பயணத்திற்கு பிறகு இலங்கையை பற்றி நன் அறிந்து கொண்டதெல்லாம் செவிவழி செய்திகளே ; உற்றார் உறவினர் அவ்வப்போது அவர்களின் மலரும் நினைவாக பேசும் செய்திகளே ; ” அந்த நாட்டுலதான் நாய் படாத பாடு பட்டோம் இங்கே அதைவிட கொடுமையா இருக்கு ” என்றோ , “அந்த நாட்ட வெள்ளக்காரன் ஆண்டாலும் சிங்களவன் ஆண்டாளும் அந்த நாடு மாதிரி நமக்கு உள்ள ‘செல்வாக்கு’ யாருக்கு வரும்..?” என்றோ , அரசாங்க அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பார்த்துவிட்டு “இதுக்கு அந்த நாடே பரவா இல்லப்பா” என்கிற அனுபவத்தின் வெளிப்பாட்டையோ கேட்காமல் எங்கள் தலைமுறையில் யாரும் இருக்கமுடியாது.
இன்னும் மலைகளில் தேநீர் இடைவெளி நேரங்களிலும் , சாப்பாட்டு நேரங்களிலும் , தொழிலாளர்கள் கதைத்த கதைகளின் வாயிலாகவும் , பிற கதைகளும் ,பாடல்களும் ,கூத்துகளும் எனக்கு மலையகம் பற்றி நிறைய தகவல் கொடுத்தாலும் இலங்கையின் மலையகத்தை நேரில் சென்று காணும் ஆசை ஊற்றுபோல ஊறிக்கொண்டேஇருந்தது. அந்த ஆசை …கனவு ‘பச்சை ரத்தம்’ வழியாக நிறைவேறியது. ஆமாம் ! ஒரு படைப்பு என்னை நான் பிறந்த ,தவழ்ந்த அந்த மண்ணிற்கே கூட்டி போனது. நண்பர்களும், தோழமை உறவுகளும், மலையக சமூகத்தின் மேல் மிகுந்த அக்கறை கொண்ட புலம்பெயர் உறவுகளும் துணை நின்றனர். கடந்த வருடம் 2014 ஜூலை மாதம் பச்சை ரத்தம் திரையிடல் நிகழ்வுக்காவும்,உறவுனர்களை சந்திக்க , மலையக எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் , போன்ற ஆளுமைகளை சந்திக்கவும் , தொழிலாளிகளை சந்திக்கவும் ஒரு மாதம் சுற்றுபயணமாக இலங்கை சென்றிருந்தேன் .
என் வாழ்நாளில் தமிழ் சமூகம் அதிகம் பேசியதும் ,போராடியதும் தமிழ் ஈழம் பற்றியது. சில போராட்டங்களில் நானும் கலந்திருக்கிறேன் . சில அரங்குகளில் பேசியிருக்கிறேன் . அதிகம் நண்பர்களோடு விவாதித்ததும் ஈழம் பற்றியதே. ரத்த சேற்றில் அப்போராட்டம் மூழ்கடிக்கப்பட்டபோது அதிகம் கண்ணீர் சிந்தியதும் அதற்கே. பரம்பரை வீரம், பழம்பெருமைகள் , அறைகூவல்கள் ,போர்ப்பறை முழக்கங்கள் என எல்லாம் பேசியும் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் ஒன்றரை லட்சம் மனிதர்கள் நம் கண்முன்னால் கொல்லபட்டனர். போர் முறை பற்றியோ , அந்த அமைப்பின் அரசியல் நிலைபாடு பற்றியோ, ராஜ தந்திரம் பற்றியோ நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் தான் கொண்ட கொள்கைக்காக தன்னையே தீப்பந்தமாக்கி , தன் உடலின் மீதே வெடிகுண்டை கட்டி தன் உயிரை துச்சமென மதித்து விடுதலையை நேசித்து களபலிப்பலியான அந்த தியாகத்திற்கு முன்னால் எவரும் நிற்கமுடியாது இது உண்மைதான்.
ஆனால் இதை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டிருப்பதாலோ , ஏற்கனவே பேசிகொண்டிருந்த விடயங்களை அப்படியே தொடருவதாலோ எந்த பயனும் இருப்பதாக நான் எண்ணவில்லை. இத்தனை உயிர்கள் பலியாகவும் எஞ்சிய மக்கள் நடைபிணம் ஆக்கப்பட்டு அல்லல்படவும் என்ன காரணம் … எங்கே தவறு இழைத்தோம்? என பரிசீலிப்பது உண்மையான விடுதலை மீதும் , இறந்தவர்களின் தியாகத்தின் மீதும் மதிப்பு வைத்திருக்கிற நேர்மையான மனிதனின் கடமை. பிரபலவாத கண்ணோட்ட வெற்று வாய்சவடால்கள் , அரசியல் உள்ளடக்கமற்ற வெற்று உணர்சிகர போராட்டங்கள் , வாக்கு வங்கி அரசியல் நிலைபாட்டிலிருந்து எடுக்கப்படும் முடிவுகள், இவை எதுவும் எந்த விடிவையும் எவருக்கும் தரபோவதில்லை.இந்த விமர்சனங்களின் ஊடாகவும் அமைந்ததே என் இலங்கை பயணம்.
பல விடயங்கள் எப்போதோ …எவரோ சொன்ன ஒற்றை வரி முடிவை அல்லது விமர்சனத்தை வைத்துகொண்டு அதை புறம்தள்ளிவிடுவதிலோ, ஆதரிப்பதிலோ முடிகிறது. நமக்கு கொடுக்கபடுகிற பல விவரங்கள் அப்படித்தான் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. செய்திகள் ‘சுடசுட பண்டமாக’ மாற்றபட்டு விற்பனை செய்யப்படும்போது அவைகள் கூரையை பிய்த்து மலைபோல நம் வீட்டில் குவியும்போது அதில் உண்மையை எப்படி நாம் கண்டடைவது? கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய் என்றான பிறகு தீர விசாரிப்பதே மெய் . இப்படியும் அமைந்தது என் இலங்கை பயணம்.
எனது அனுபவத்தை ஒரு தொடராக எழுத திட்டமிட்டு இதை தொடங்கியிருக்கிறேன். உங்களை போல ஓர் எளிய மனிதனின் பயணம். எனது ஒரு மாத பயணத்தின் ஊடாக , நான் சொல்லுகிற செய்திகளின் மூலம் உங்களுக்கும் ஏதேனும் புதுவிவரங்கள் கிடைக்கலாம். எதுவும் முழுமையானது இல்லை; முழுமையை நோக்கிய பயணமே வாழ்வு. இந்த முகநூல் தொடரும் அப்படி ஒரு தேடலே ….
——- பயணிப்போம் ——–
நட்புடன் ,
தவமுதல்வன் .
குறிப்புகள் : *லயம் – line – வரிசையான வீடுகள் .
* பணிய — தாழ்வான பகுதி .