நேர்காணல்

உலகத்தை ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவருவதற்கு எதிராக குரல் எழுப்பும் யாவருடனும்
கதைக்கவேண்டும்…
– சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே

கடந்த 2014 ஜூலை மாதம் எனது ஆவணப்படம் திரையிடல் தொடர்பாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது நண்பர்களின் உதவியோடு இலங்கையின் பெரும் பாலான பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும், பன்முகபட்ட ஆளுமை களைச் சந்திக்கவும் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி உரையாடவும் முடிந்தது. இலங்கையின் எந்தப்பகுதியில் எந்தவொரு ஆளு மையை சந்தித்தாலும் இயக்குனர் பிரசன்னா விதானகேயை எப்போது சந்திக்கப் போகிறோம் என்கிற ஆதங்கம் மட்டும் அதிகரித்து கொண்டேயிருந்தது. அவரைச் சந்திக்கும் ஆவலை இன்னும் அதிகமாக்கியவர் திரைப்பட விமர்சகர் கரவெட்டி கேதாரநாதன் அவர்கள்.

கேதாரநாதன் பிரசன்னாவின் ஆத்மார்த்த நண்பர், விமர்சகர். தமிழ் திரைப்படங்களைப் பற்றியும், பல்வேறு நாடுகளின் மாற்று திரைப்படங்கள் பற்றியும் அவருடைய விரி வான கட்டுரைகள் இணையதளங்களில் உண்டு. அவர் நான் யாழ்ப்பாணத்தில் ஊடக நண்பர் திரு.நிரோசன் வீட்டில் தங்கியிருக் கும் போது என்னைக் காண வந்திருந்தார். பல்வேறு படங்கள் பற்றி அவருடைய பேச்சு நீண்டபோதும் அவர் அடிக்கடி ஆராதித்துக் கொண்டாடிய பெயர் பிரசன்ன விதானகே. ‘பவுர்ணமி நிலவில் மரணம்’ படத்தில் தொடங்கிய எங்கள் பேச்சில், அந்தப்படம் வெளியாகும் முன்பு நிகழ்ந்தவைகளை விளக்கிச் சொன்னார். போருக்கு எதிரான அந்தப் படம் இலங்கையில் சந்திரிகா குமார துங்கா அரசால் தடை செய்யப்பட்டது. உயர் நீதி மன்றத்தில் பிரசன்னா இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

தனக்கான ஒரு வீட்டைக் கட்டவும், தனது சகோதரியின் திருமணச் செலவிற்காகவும் இராணுவத்தில் சேர்ந்த பண்டார இறந்து போனதாக மூடி முத்திரை இடப்பட்ட சவப் பெட்டியில் அவனது உடல் கொண்டுவரப் படுவதாக காண்பிக்கப்படுகிறது. அவன் போர்க்களத்திலிருந்து திரும்பி வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருந்த குடும்பத்திற்கு இச்செய்தி பேரிடியாக இருக்க அவனது அப்பா வன்னிஹாமி அவன் இறப்பை நம்ப மறுப்பதோடு அரசால் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் வாங்க மறுக்கிறார். அஞ்சல்காரன், மகள், மருமகன் எல்லோரும் அதை வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தாலும் வன்னிஹாமி கையெழுத்திட மறுக்கிறார். ஒரு கட்டத்தில் மகன் புதைக்கபட்ட மயானத்திற்கே சென்று கல்ல றையை தோண்ட முயற்சிக்கிறார். வீட்டார் தடுக்க, ஊர்க்காரர் களும் அங்கு கூடிவிடுகின்றனர். கல்லறையைத் தோண்டி முத்திரை இடப்பட்ட பெட்டியை உடைத்துப் பார்க்கும்போது அதில் சடலத்திற்குப் பதிலாக நீளமான இரு வாழைத்தண்டுகள் இருக் கின்றன. ஒரு போர் எப்படி ஒரு தனிமனித வாழ்வை பாதிக்கிறது என்பதையும், தனது சொந்த நாட்டு மக்களையே இராணுவம் எப்படி நடத்துகிறது என்பதையும் சொல்லும் அப்படம் இலங்கை இராணுவத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டியது.

இருந்தபோதும் இராணுவத்தினர் பிரசன்னாவை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தெருவில் இறங்கி உண்டியல் ஏந்தி பிச்சை எடுத்தனர். படம் வெளிவரக்கூடாது என ஆர்ப்பாட் டம் செய்தனர். படத்தை தடை செய்தது அரசு. இழப்பீட்டை மக்க ளிடம் வசூலிக்கக்கூடாது, அரசுதான் கொடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் இடித்துரைத்ததும் இராணுவம் வசூலிப்பதை நிறுத்திகொண்டது . பின்பு நடந்த வழக்கில் பிரசன்னா வெற்றி பெற்று அவருக்கு இழப் பீடாக ஐந்து லட்சம் கொடுக்கவும் உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்திரவிட்டது. அந்த நிதியைப் பெற்று அந்த தொகையுடன் நண் பர்களிடமும் கொஞ்சம் வசூலித்து நீண்ட காலமாக நடத்தி நின்றுபோன ஒரு சிங்கள இடதுசாரி பத்திரிகையான இருசூரியன் குழுவிற்கு கொடுத்தார். இந்தக் குழுவினர் தேசிய இன பிரச்சனையில் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்காக இயங்குபவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. படம் இலங்கையில் திரையிடப்பட்டு வணிகரீதி யாகவும் வெற்றிகரமாக ஓடியது.

நான் பார்த்த அவரின் முதல் படமும் அது தான். மாற்று சினிமா குறித்த அரசியல் உள்ளடக்கம். கதை சொல்லும் முறை, எளிய தயாரிப்பு முறை பற்றியெல்லாம் ஒரு நம்பிக் கையைக் கொடுத்த படமும் அதுதான். கேதாரநாதன் சொல்வதுபோல அரசியல் உணர்வு காட்சிப்படிமம் ஆகும் போது தூய சினிமா பிறக்கிறது என்பதைப்போல பிரசன் னாவின் பல படங்களை நாம் அவதானிக்க முடியும். 1990களில் உருவான அவர் ஆரம்பத்தில் நாடக மொழிபெயர்ப்பாளராக, இயக்குனராக விளங்கினார். பின்பு அவர் இயக்கிய சிசில கினிகினி- நெருப்பும் பனியும், அனந்த ராத்திரியே- ஆன்மாவின் இருண்ட இரவு, பவுரு வலசு – சுவர்களுக்கிடையில், புரசந்த கலுவர- பவுர்ணமி நிலவில் மரணம், இறுதியாக வித் யு வித்தவுட் யு ஆகிய படங்கள் அனைத்தும் சமூக நோக்கிலான உள்ளடக்கத்தைக் கொண்டிருப் பதோடு உலகு தழுவிய விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றன. ஒவ்வொரு படத்தைப் பற்றியும் கேதார நாதன் விளக்கிச் சொல்ல, அந்த இரவு பவுர்ணமியை சந்திக்கிற முதல் நாளாகவும் அவரின் ஆத்மார்த்த நண்பனை சந்தித்த இரவாகவும் அமைந்தது.

அடுத்த நாள் மதியம் கொழும்பில் நண்பர் ஜெயக்குமார் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நண்பர் பிரபாகருக்கு ஒருவர் அலைபேசியில் பேச உற்றுக் கவனித்தேன். இருவரும் சிங்களத்தில் பேசினர். அவர்தான் கூப்பிடுகிறார், மூன்று மணிக்கே நாம் அங்கே போய்விட வேண்டும். வேறு வேலைகளை நமக்காக ஒதுக்கிவிட்டு காத்திருக்கிறார் என்றார். யார் என்றேன். அவர்தான் பிரசன்னா விதானகே என்றார். எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது அது.

ஒரு ஆட்டோவில் பயணித்து என் .எம். பெரேரா சாலையில் உள்ள லிடோ திரையரங்கின் முன்னால் இறங்கினோம் மூவரும் . எதிரே இருந்தது அந்தக் கட்டிடம். பல்வேறு தொழில்களில் முதலீடு செய் யும் நிறுவனம் என்றும் அதனொரு பகுதி சினிமா தயாரிப்பது என்றும் பிரபா சொன்னார். நாங்கள் உள்ளே நுழைந்து வரவேற் பறையில் விசாரித்தபோது சிங்கள பெண்ணொருவர் ஓ… அது நீங்களா? சார் உங்களுக்காக காத்திருக்கிறார், மேல் மாடிக்குப் போங்க… என படிக்கட்டை காட்டினார். மேலே ஏறிப் போனோம். எனக்கு வன்னிஹாமி ஞாபகத்தில் வந்து போனார். வாங்க… வாங்க … என்று எதிரே வந்து கை கூப்பி அழைத்த அந்த நபர் பிரசன்ன விதானகே. பல அறைகளை கொண்ட அந்த வளா கத்தில் நாங்கள் தடுமாறிவிடக்கூடாதென அவர் அறையை விட்டு வெளியே வந்திருந்தார். சின்னஞ்சிறிய அவர் அறைக்குள் நுழைந்தபோது அவர் பக்கத்து அறைக்குப் போய் ஒரு நாற் காலியை தூக்கிக்கொண்டு வந்து போட்டு உட்காருங்கள் என்றார். எனக்கு நம்மூரின் பல அலுவலகங்கள், பல இயக்குனர் முகங்கள் வந்து போயின. வராமல் போனால்தானே ஆச்சரியம்?

எங்களை பிரபா அறிமுகம் செய்துவைத்தார் . நீங்கள் தான் தவ…முதல்வன். ஒரு கணம் கண்மூடி தவமுதல்வன் என அவருக்கு சொல்லிக்கொண்டார். பின்பு இரண்டொரு ஆங்கில வார்த்தைகள் பேச, சிங்களமும் தெரியாமல் ஆங்கிலமும் அரை குறையாக நான் இருக்க பிரபாகர் என் நிலைமையை அவருக்கு சொன்னார். நீங்கள் இந்தியாவில் இருந்து வந்திருப்பதில் அதிலும் என்னை சந்திப்பதில் ஒரு சினிமாக்காரனாக மிக்க மகிழ்ச்சி. எனக்கு மேலும் உற்சாகம் கூடுகிறது. எனக்கு தமிழ் தெரியாது, உங்களுக்கு சிங்களம் தெரியாது. அது பிரச்சனை இல்லை. சினிமாதான் நம்முடைய மொழி. அதுதான் என்னையும் உங்க ளையும் இணைத்திருக்கிறது… நாம் பேசுவோம் என்றார் . இதை பிரபா எனக்கு சொல்ல, தொடர்ந்தது எங்கள் உரையாடல்.

நான் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்றவன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நான் இங்கே வந்து பார்க்கும் போது நிறைய வலிகள், வேதனைகள். ஆனாலும் சர்வதேசரீதியாக மக்கள் கருத்தை நவீன வெகுசன ஊடகமான திரைப்படம் ஊடாக சொல்லும் ஒரு பெரிய கலைஞனை இன்று நான் சந்தித்திருக்கின் றேன். அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி…

வேர்களுடன் தொடர்புகளை முறித்துக்கொள்ளாமல் வேர்களைத் தேடிவந்த உங்களைச் சந்திப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. மேலும், உங்கள் வேர்களைத் தேட வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கின்றது என நான் நம்புகின்றேன். அந்த வகையில் மகிழ்ச்சி. ஏனெ னில் இப்படி சந்திப்பவர்கள் மிகவும் குறைவு. மேலும், எனது ஏதோ ஒரு படைப்பின் மூலம் ஏதோ ஒருவிதத்தில் கவரப்பட்ட/ பாதிக்கப்பட்ட ஒருவர் என்னைத் தேடிப் பார்க்க வந்ததையிட்டு சினிமாக்காரன் என்ற வகையில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். வேறொரு மொழியில் பேசக்கூடியவராக இருந்தாலும் கலை இருவரையும் இணைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றேன்.

இன்றைய நிலையில் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் படங்களை குறைந்த முதலீட்டில் தயாரிக்கும்போது அடுத்தபடத்தை தயாரிக்க முடியாத நிலையிலேயே படங்களின் ஓட்டம், சந்தைப்படுத்துதல் எல்லாமே உள்ளன. எனில், முதலீட்டை எவ்வாறு மீள எடுக்கிறீர்கள்? திரைப்பட விழாக்களை மட்டும்தான் நம்பியுள்ளீர்களா?

நான் தயாரிக்கும் படங்கள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். ஏனெனில் இப்படங்கள் எனக்கு மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. எனது படங்கள் அனைத்தும் ஆகக்குறைந்தது 50 நாட்களுக்கு குறையாது இலங்கை யின் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.

நான் வாழ்வதே திரைப்படம் தயாரிப்பதற்காகத்தான். இதனால் வாழ்க்கையில் பெரிதாக எதையும் எதிர்பார்ப்ப தில்லை. குறிப்பாக சொத்து, சுகங்கள்… நாம் நினைப் பதைச் சாதிப்பதற்காக இவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். மேலும் எனது திரைப்படங்கள் உலகிலுள்ள நவீன ஊடகங்கள் ஊடாகவும் ரசிகர்களை சென்றடை கின்றன. குறிப்பாக இணையம் மற்றும் அடர்வட்டு குறுந்தகடு ஊடாகவும் சென்றடைகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை. இதனால்தான் எனது திரைப்படங்களுக்கு முதலீடு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முன்வருகின்றார்கள். ஒரு புறத்தில் தயாரிப்பாளர்களுக்கும் கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன் அவர்களுக்குப் பாரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தவும் இல்லை.

உங்களுடைய திரைப்படங்கள் இவ்வளவு காலம் ஓடியிருக்கின்றன. ஏதோ சர்வதேச திரைப்படவிழாக்களுக்கு அனுப்புவீர்கள் என்றும், திரையரங்குகளில்ஆங்காங்கே பார்ப்பார்கள் என்றும், அறிவுஜீவிகள் மட்டத்தில் பேசுவார்கள் என்றும் நினைத்திருந்தேன். அது தவறு என்று இப்பொழுது புரிகிறது. உங்கள் பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

இலங்கையைவிட இந்தியாவில் முதலாளித்துவ முறைமை மிகவும் பலமானது, விசாலமானது. பெரிய கைத்தொழில். இலங்கை, கேரளா போன்ற ஒரு சிறிய தொழில்துறையைக் கொண்டது. இலங்கை இன்னும் இந்தியா அளவிற்கு வரவில்லை. ஆனால் எங்களுக்கும் எப்போதாவது அந்த நிலைமைக்கு முகங்கொடுக்க நேரி டும். உலகமயமாக்கலின் கீழ் இன்று இலங்கையின் திரை யரங்குகளில் கூடுதலாகக் காண்பிக்கப்படுவது ஹொலி வுட் படங்களாகும். இன்று அதிகமாக ஹொலிவுட் படங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு செல்கின்றன. இந்த நிலைமையின் கீழ் எமது படங்களைத் திரையிட திரையரங்குகள் மறுக்கும் நிலையும் ஏற்படலாம்.

தமிழ்நாட்டில் சினிமா எல்லாத்துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்து மாற்று கலைகள், தேசிய இனங்களின் பண்பாடு என்பனவற்றின் வளர்ச்சியை அழித்துகொண்டுவருகிறது.

உலகமயமாக்கலின் கீழ் தேசிய இனங்களின் அடை யாளம், பொருளாதாரம் என்பன இல்லாமல் போகும் போது அதன் ஒருபகுதியாகத்தான் இந்தத் திரைப்படத் துறைக்கும் ஏற்படும். அரசியல்ரீதியாக சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புதான் திரைப்படத்துறைக்கும் வரும்.

உலகமயமாக்கம் ஒற்றைக்கலாச்சாரம் நோக்கி எல்லா மக்களையும் தள்ளுகிறது. எல்லா மொழி பேசக்கூடிய, வேறுபட்ட கலாச்சாரத்தை உடையவர்களை ஒரே கூட்டிற்குள் அடைத்து பொதுவான ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்று சென்று கொண்டிருக்கின்றது. இங்கு தற்சார்பு என்பதெல்லாம் கிடையாது. இந்தச் சூழலில் ஒரு திரைப்பட இயக்குனரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

உதாரணமாக இந்த உலகமயமாக்கல் காலத்தில் ஐரோப்பா சென்றால் எல்லா நகரங்களும் ஒரே மாதிரி யானவையாகத் தோன்றும். ஏனெனில் எங்கு சென்றா லும் மெக்டொனால்ஸ் என்பது ஒரே மாதிரியானது. இவ்வாறு உலகிலுள்ள பன்மைத்தன்மையினை இல்லாது செய்துதான் உலகமயமாக்கலின் கீழ் இந்த ஒற்றைத் தன்மை ஏற்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் சினிமாக்காரர்களின் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரைப்படம் என்பது மனித வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது. மனித வாழ்வியலைச் சித்த ரிக்கிற பொழுது நீங்கள் வந்து என்னைச் சந்தித்தது போல் எனக்கும் பொறுப்பிருக்கிறது. எனது திரைப்படத்தின் ஊடாக உங்களைத் தேடி வருவதற்கு உங்களைப் போன்ற வேறு யாராகவும் இருக்கலாம். அவர்கள் இந்தியாவில், வங்கதேசத்தில் எங்கும் இருக்கலாம். அவர்களுடன் கதைக்கவேண்டும். ஐரோப்பாவில் அல்லது உலகில் எங்கிருந்தாலும் இந்த உலகத்தை ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவருவதற்கு எதிராக குரல் எழுப்பும் யாவருட னும் கதைக்கவேண்டும். இதற்கு நாம் இன்று முன்னேறி யுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக இணையம் போன்றவற்றை பாவித்து உலகமயமாதலுக்கு எதிரானவர்கள் அனைவருடனும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புதல் வேண்டும்.

நீங்கள் கூறுவது போன்ற கருத்து எனக்கும் உண்டு. தமிழகத்தில் உங்களைப் போன்று இயங்கக்கூடிய அனைவரோடும் சேர்ந்துதான் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

அது நல்ல விஷயம். நாம் அதை செய்யவேண்டும். ஏனெ னில் உலகமயமாதலின் கீழ் முதலாளித்துவத்திற்கு ஆட் களை ஒன்று திரட்டமுடியாதுள்ளது. உலகமயமாக்கலி னால் இன்று மக்கள் தங்கள் வேர்களைத் தேடிச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. உதாரணமாக முஸ்லீம்கள் தங்கள் இனம் பற்றிச் சிந்திக்க முயல்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் வேறொரு இனத்தினால்தான் என்று அரசியல்வாதிகள் சாதாரண மக்களின் மனங்களில் பதிய வைக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சினைகள் முதலா ளித்துவத்தினால்தான் ஏற்படுகின்றது. இங்கு முதலாளித் துவத்தின் முரண்பாடே காணப்படுகின்றது. இந்தநிலை யில் சகோதரத்துவம் தொடர்பான மாற்று கருத்தியல் இருத்தல் வேண்டும். இவ்விடத்தில் நாம் உலகம் மத ரீதியாக, இனரீதியாக பிளவுபடுவதற்கு எதிராகப் போராட வேண்டும்.

சகோதரத்துவத்தில் ஒன்றிணைவதற்கு ஒரு நிபந்தனை அவசியம். அதாவது நான் சிங்களவனாக இருந்தாலும் இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்கள் (அது வட-கிழக்கு தமிழராக இருக்கட்டும், மலையகத்தமிழராக இருக்கட் டும்) ஒடுக்கப்படும் ஓர் இனம் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை முதலில்அவசியம்.

ஆம் அரசியல்ரீதியாகவும் உண்மையை ஏற்றுக்கொள்ளுவதற்கு தயக்கம் இல்லாது சுயவிமர்சனமும் வரவேண்டும்.

இலங்கையில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. சகோத ரத்துவத்தை வலியுறுத்தினாலும், இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித்துவமான பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. முதலில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் என்ன நடந்துள்ளது என்றால் இனம், பண்பாடு, மொழி, ஈழ விடுதலை பற்றி குரல் எழுப்புகிற அதேவேளை அவற்றைக் குறுந்தேசிய இனப்பார்வை கொண்டதாக மாற்றி, வெற்றுப்பெருமை பேசி வாக்குச்சீட்டு அரசியலுக்கானதாக மாற்றிய தன் காரணமாக உண்மையான கலைஞர்களும் எழுத்தாளர்களும் மதிக்கப்படாமல் உள்ளனர். நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது சிங்கள வர் என்ற ஒரே காரணத்திற்காக உங்களது வித்யூ வித் அவுட் யூ படத்துக்கு திரையிட எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனாலும் படத்தை சேவ் தமிழ் அமைப்பினர் திரையிட்ட பிறகு நிறைய பேரால் அந்தப் படம் பற்றி பேசப்பட்டது.

அந்த சம்பவம் இடம் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைகி றேன். ஏனெனில் நம்மிடையே முன்பைவிட கூடுதலான புரிந்துணர்வு இப்பொழுது ஏற்பட்டுள்ளது என நம்பு கின்றேன். தமிழ்நாட்டுத் தமிழர்கள், சிங்களவர் யாரும் யுத்தத்தை எதிர்க்கவில்லை என்று நினைக்கக்கூடும். இது ஒருவிதத்தில் நியாயமானது. ஆனால் யுத்தத்திற்கு எதிரான குரல்கள் இலங்கையில் உள்ளன. மேலும் உலக மயமாக்கல், உள்நாட்டில் சிங்கள மக்கள் நசுக்கப்படுவ தற்கு எதிராக குரலெழுப்புவோர் நிறையபேர் உள்ளனர் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது. இல்லாவிடின் இலங்கையிலுள்ள சிங்களவர்கள் அனைவரும் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற கருத்தே தமிழ்நாட்டில் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கும். இந்த குறித்த சம்பவம் அந்த கருத்தை மாற்றியமைப்பதற்கு ஓரளவுக்கு உதவியுள்ளதையிட்டுச் சந்தோசஷப்படுகின்றேன்.

உங்களுடைய படத்தை சிங்களப்படம் என்பதால் திரையிடக்கூடாது என சில அமைப்புகள் தொலைபேசி வழியாக எதிர்ப்பு தெரிவித்ததாக பத்திரிகைச் செய்தியைப் பார்த்தேன். என்ன முட்டாள்தனமாக இருக்கு, ஏதாவது செய்யலாமே என சேவ்தமிழ் அமைப்பினரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர்களும் அந்த கருத்தில் இருந்தனர், படத்தைத் திரையிட்டனர். பிறகு முகநூலிலும் அனேக நண்பர்கள் படத்திற்கு ஆதரவாக பதிவிட்டனர். ‘தமிழ் இந்து’ என்ற நாளிதழ் – அதன் மீது நமக்கு விமர்சனம் இருப்பினும் – உங்கள் விடயத்தில் நேர்மையாக நடந்துகொண்டது. ‘தமிழருடைய வலியைக்கூட ஒரு சிங்களவர் பதிவு பண்ண வேண்டிய நிலையில் தான் கலையைப் பற்றிய நம்முடைய புரிந்துணர்வு உள்ளது’ என்று ஒரு கட்டுரையில் அது பதிவு செய்தது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியவாதம் மட்டும் கதைத்து இலங்கையின் வட- கிழக்கு பிரச்சினையை மட்டும் பேசிவரும் அரசியல்வாதிகளின் உண்மை முகங்கள் அம்பலமாகி சமீபகாலமாக பலரும் அவர்களிட மிருந்து விலகி வருகின்றனர். உங்களுடைய நிகழ்ச்சிக்குப் பிறகு – தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு கலை பற்றிய புரிதல் பெரிதாக இல்லை, அவர்கள் படிப்பது கிடையாது, சமூகத்தினுடைய உண்மையான கலைஞனை அடையாளம் காண முடியாதளவுக்கு அவர்களின் அரசியல் அபத்தமாக உள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
அரசியலில் ஈடுபடுபவர்கள் ஒரு கருத்தியலை முதன் மைப்படுத்தி சமூகம், பொருளாதாரம் போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்தி போராட்டங்களைத் தொடர்கின்ற னர். புள்ளிவிபரங்களால் செய்யமுடியாதவற்றை கலை மூலமாக செய்யமுடியும் என நினைக்கின்றேன், உணர்த் தவும் முடியும். அதை உணர முடியுமானால் அதுதான் இந்த ஊடகத்தின் – விஷேடமாக திரைப்பட ஊடகத்தின் பலமாகும். அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்கிறோம்.

முன்னைய தமிழ்த்திரைப்படங்களில் தனக்குப் பிடித்தது பராசக்தி என்று எனது தந்தையார் அடிக்கடி சொல்வார். நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பராசக்தியை எடுத்து பார்த்தேன். திரைப்படம் சார்ந்த குணாம்சங் களுடன் பார்க்கும்போது அது ஒரு சிறந்த படைப்பல்ல. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு சமூக மாற்றத்தை, தமிழ்த் தேசிய உணர்விற்கு ஒரு புனர்ஜீவனம் ஊட்ட அந்த படத் தினால் முடிந்தது. இதுதான் திரைப்படத்தின் இயல்பு.

தமிழ்நாட்டில் சொல்லப்படுகின்ற ஒரு விடயம், இதுவரை பராசக்தியின் இடத்தை எந்த படமும் நிரப்பவில்லை என்பதாகும். பிராமண எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் சரியாகப் பதிவு செய்த, ஒரு சமூகப் படம். இன்று மாற்றுத் திரைப்படங்கள் எடுக்கும் போது இரண்டு விடயங்களை அவதானிக்கலாம். ஒன்று மக்கள் பிரச்னைகளைப் பேசக்கூடிய படங்கள் இருண்மையாக உள்ளன. நட்சத்திர ஹோட்டல்களில் விழா நடத்தி அதைப் பற்றி வரும் விமர்ச னங்கள் ஒரு சினிமாக்காரரால் கூட படிக்க முடியாத அளவிற்கு இருக்கும். மற்றது, சில படங்கள் பற்றி சர்வதேச படவிழாக்களில் பேசப்படும். அப்பொழுதுதான் நமக்கே தெரியவரும். இது ஒரு வழி. ஆனால் உங்களுடைய படங்கள் அதிலிருந்து விலகி வந்து மக்கள் பிரச்னைகளைக் கதைத்து மக்களிடமே போகிற மாதிரி உள்ளது.

சிலர் சினிமாவை தமது சுய முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்துகிறார்கள். திரைப்படம் என்பது விழாக்களோ விருதுகளோ அல்ல. அது ஒருவர் உணர்கிற விடயத்தை இன்னொருவருக்கு உணரச் செய்வதாகும். இன்னொரு வரது மனதிற்கு அதை உணர்த்துவதில் நாம் தோல்வி கண்டால் அந்தப் படங்கள் நிலைத்து நிற்காது. உதாரணத் திற்கு இத்தாலியின் டிஷிகாவின் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ மற்றும் ஈரானிய திரைப்படங்கள், அதேபோல் அகிரா கொரோசோவின் படங்கள்- மக்களின் மனங்களைத் தொடுபவையாக உள்ளன. இந்தப்படங்கள் இன்று நாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு/ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாழ்வதற்கான தைரியத்தை/ தன்னம்பிக் கையை கொடுப்பனவாக அமைந்துள்ளன. வாழ்வைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. எனக்கும் இவ்வாறான படங்களே விருப்பம். எனவே மற்றைய படங்களுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவோ, அவற்றை இல்லாமல் செய்யவோ ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடும்.

நான் பாடசாலை போகும் காலத்தில் பார்த்த முதலாவது தமிழ்ப்படம் பாலுமகேந்திராவின் அழியாத கோலங் கள். படத்தில் பாலு கெமராவைப் பயன்படுத்தியிருந்த விதம், அவர் சூழலை பார்த்த விதம், இலையில் விழும் தண்ணீர்த்துளி, கிராமியச்சூழல் இதுபோன்றே எல்லா நல்ல படங்களும் வாழ்க்கையை அனுபவிக்கச் செய்கின் றன. எமது வாழ்க்கை மதம், அரசியல் போன்றவற்றி னால் அடிமைப்படுத்தப்படாமல் வாழ்க்கையை அனுப விக்கத் தூண்டுகிறது. பாலு மகேந்திராவின் படங்களி லும் வெளிநாட்டுப் படங்களின் தாக்கம் இல்லாம லில்லை. இருந்தாலும் அவருடைய படங்களைப் பார்க் கின்ற பொழுது எனக்கு வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு ஏற்படுகின்றது. முப்பது வருடங்கள் கடந்த நிலையிலும் என் னுள் அந்தப் படத்தின் தாக்கம் உள்ளது.

வணிகரீதியான படங்களைத் தயாரிக்கிற பொழுது ஒளிப்பதிவாள ருக்கோ ஏனைய வேலைகளைச் செய்பவர்களுக்கோ ஒரு காட்சியை எவ்வாறு படமாக்கவேண்டும் என சொல்லிக் கொடுத்தால் போதும் அவர்கள் அதைச் செய்துவிடுவார்கள். ஆனால் இவ்வாறான மக்கள் சார்ந்த மாற்றுத் திரைப்படங்களை தயாரிக்கின்ற பொழுது திரைப்படக் குழுவிலுள்ள ஏனைய பணியாளர்களுக்கும் குறித்த காட்சி பற்றிய சமூக அரசியல் அறிவு அவசியமா?

சூழலைப் பற்றிய முழுமையான அறிவு அவசியம், சமூ கத்தைப் பற்றிய அறிவு முக்கியமானது. மனிதர்களின் நடத்தை பற்றிய அறிவு அவசியமானது. ஒருகாட்சியில் இரண்டு பாத்திரங்கள் இருக்குமாயின் அந்தப் பாத்திரங்களின் மன அசைவுகள் பற்றிய தெளிவும் அவசியமா னது. நான் ஒளிப்பதிவை மேற்கொள்ளச் சொல்லும் போது பாத்திரத்தின் உள்ளே அகத்தில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தக்கூடியதாக இருத்தல் வேண்டும். அதை காட்சிப்படுத்துதல் (take up) வேண்டும். இதற்கு மனித வாழ்வியல் பற்றிய தெளிவு, சமூகத்தைப் பற்றிய அறிவு என்பன கட்டாயம் இருத்தல் வேண்டும். காட்சிகள் பற்றியதான தெளிவுவேண்டும். முழு குழுவிற்கே இந்த அறிவு வேண்டும்.

இன்றைய இயக்குனர்களிடம் காணப்படும் பிரதான குறை யாதெனில் மனிதர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்வதில்லை. சாதாரண மனிதர்களிலிருந்து விலகியே உள்ளனர். சாதாரண மனிதர்களின் வாழ் வியலை அறியாதவிடத்து அந்த இடைவெளி திரைப் படத்திலும் வெளிப்படும்.

இந்தியாவில் மாற்று சினிமா பற்றி கதைப்போரும் ஏற்கனவே இருக்கும் வணிக ஃபார்மேட்டுக்குள்ளேயே எதையாவது செய்துவிடலாம் என்றுதான் யோசிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கம் தான்…

முன்னர் வணிக சினிமாவில் வேலை செய்த பலருக்கு மக்கள் பற்றிய தெளிவான புரிதல் இருந்தது என நான் நம்புகின்றேன். உதாரணத்திற்கு விமால்ரோயின், குரு தத் போன்றோரின் படங்களில் இதை காணலாம். ராஜ் கபூரின் ஆரம்பகால படங்களிலும் இதை அவதானிக்கலாம். ஏனெனில் அவர் மற்றும் அப்பாஸ் போன்றோர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புபட்டவர்களாக இருந்தனர். இன்றுள்ளவர்கள் முதலில் நல்ல வீடு ஒன்றை கட்டிக்கொள்கிறார்கள். நவீனரக கார் ஒன்றை வாங்கிக்கொள்கிறார்கள். நல்ல வங்கிக்கணக்கொன்றை பேண விரும்புகிறார்கள். இதனால் சாதாரண மனிதர்க ளிடமிருந்து விலகி தூர போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு காலம் கஷ்டப்பட்டேன், எனவே எனக்கு இவ்வளவு (கோடிக்கணக்கில்) சம்பளம் வேண்டும். அடுத்து பெரிய பங்களா வேண்டும். பிறகு திருமணம் செய்யவேண்டும். இதைத்தான் அவர்கள் சினிமாவில் ஜெயிப்பது என்பதாக சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்… நீங்கள் ஒரு படப்பிடிப்பை எப்படி திட்டமிடுவீர்கள்?

முதலில் நான் கூடுதலான காலத்தைத் திரைக்கதைக்குத் (Script) தான் கொடுப்பேன். ஏனெனில் சிந்தனையை எண்ணங்களை முதலில் தாளில் குறித்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. சில வேளைகளில் திரைக்கதை எழுத ஒருவருடம்கூட ஆகும். நான் எடுக்க விருக்கும் அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடிக்க 20 வருடங்களாகின. இரண்டாவது, என்னோடு பணி புரியும் குழுவினருக்கு என்னை பற்றி நன்கு தெரியும். நான் அவர்களை எனக்கு இணையாக மதிக்கின்றேன். அதிர்ஷ்டவசமாக எனது துணை இயக்குனரும், புகைப்பட இயக்குனரும் அவர்களது வாழ்க்கையின் அனைத்து வேலைகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு என்னோடு பணிபுரிய வந்துவிடுவார்கள். நாங்கள் இணைந்து அந்த உத்வேகத்துடன் ஏனையவர்களை வழிநடத்திச் செல் வோம். அடுத்தது படத்தின் பாத்திரங்கள் பற்றி அதிகம் சிந்தித்தல் வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்தினுடைய உள்ளடக்கம் பற்றி தெரிந்துகொண்ட அளவிற்கு தான் நாம் அதை படத்தில் கொண்டு வர முடியும். இதை தேர்ந்த நடிகர், நடிகையர் மூலம் வெளிக்கொணர வேண்டும். எனவே கதாபாத்திரங்கள் பற்றி நடிகர், நடிகையருடன் தெளிவாக உரையாட வேண்டும்.

திரைப்படம் தொடர்பில் அதனுடைய திரைக்கதை, தொழில்நுட்பம் என்பவற்றைத் தாண்டி அரசியல் உணர்வுதான் அனைவரையும் ஒன்றிணைக்கின்றது என்று சொல்லலாமா?

நான் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன். ஒவ்வொரு படத்தின் ஊடாகவும் எம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்வது தவிர்க்க இயலாது. ஆனால் இங்கு முக்கியம் பெறுவது என்னவென்றால் எமது விழுமியங்கள் என்ன? நான் முக்கியத்துவம் கொடுப்பது பணத்திற்கா அல்லது அதைவிட வேறு விடயங்களுக்கா? எம்மை அறியாமலேயே எமது விழுமியங்கள் இந்தப் படங்கள் ஊடாக வெளிவரும். நாம் மனிதர்களிடத்தில் அன்பு செலுத்தாவிட்டால் சமூகத்தைப் பற்றி புரிதல் இல்லா விட்டால் எமது படம் தோல்வியில் போய்முடியும். இங்கு முக்கியம் பெறுவது நாம் ஏன் படத்தை தயாரிக்கின்றோம்? அதனூடாக நாம் என்ன விடயத்தை வெளிப் படுத்த முயல்கின்றோம்? எமக்கு திரைப்படத்தினூடாகச் சொல்வதற்கு எந்த கருத்தும் இல்லாவிட்டால் எவ்வளவு தான் நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அந்தப் படம் வெற்றியளிக்காது.

மாற்றுத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மக்களைத் தூண்டுவதற்காக இன்றைய முதலாளித்துவ முறைமையில் காணப்படுகின்ற ஊடகங்கள் மட்டும் போதுமா? அல்லது வேறு அமைப்புகளையோ, மார்க்கங்களையோ நாம் தேட வேண்டுமா?

முதலாளித்துவ முறைமையின் கீழ் காணப்படும் ஊடகங் கள் எந்த வகையிலும் போதுமானதல்ல. நாம் வெளிப்படுத்தும் அல்லது உயர்த்திவைக்கும் விழுமியங்கள் தொடர்பில் எமக்கு பொறுப்பு இருத்தல்வேண்டும். அந்த விழுமியங்கள் தொடர்பில் முன்நிற்பதற்கும், அதை பரந்த ரசிகர்களிடத்தில் கொண்டுசெல்வதற்குமான அவசியம் இருத்தல் வேண்டும். இதற்காக தமிழ் நாட் டில் உள்ளவர்களும் இலங்கையிலுள்ளவர்களும் ஒன்றி ணையவேண்டும். அதேபோல் வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுடனும் இணைந்து செயலாற்றவேண்டும். திரையரங்குகள் கிடைக்காவிட்டாலும் மாற்று விநியோக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

படமாக்கலில் எந்தப் பகுதி அதிகம் செலவினத்தைப் பிடிக்கிறது?

முன்னர் நெகடிவ்களுக்குஅதிகம்செலவாகியது. இரு நூறு இலட்சம் செலவாகிய திரைப்படத்தில் 35 இலட்சம் நெகடிவ்களுக்கு செலவாகியது. டிஜிட்டல் முறை வந்த பிறகு இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்று அதிகச் செலவு உணவிற்கும், போக்குவரத்திற்கும் ஆகும்.

சென்னையில் நடக்கும் எடிட்டிங் போன்றவற்றுக்கு ஆகும் செலவு?

இலங்கையில் ஒருநாளைக்கு உணவிற்கும் தங்குமிடத் திற்கும் இரண்டரை இலட்சம் ரூபா செலவாகிறது. ஒரு படத்திற்கு குறைந்தது 25 நாட்கள் வரை படப்பிடிப்பு இடம் பெறுகிறது. எடிட்டிங்கைப் பொறுத்தவரை உணவிற்கும் தங்குமிடத்திற்கும் ஆகும் செலவில் 4 நாள் செலவு மட்டுமே ஆகும். எனது திரைப்படங்கள் மாற்று திரைப்படங்கள் என்பதால் சென்னையில் ஸ்ரீகர் பிரசாத் என்னிடம் குறைந்த அளவு செலவில் எடிட்டிங் வேலைகளை செய்து தருகிறார்.

உங்கள் பார்வையில் தமிழ்நாட்டில் நம்பிக்கை தரக்கூடிய இயக்குனர்கள்…

இப்போது சில பெயர்களை நான் தவறவிடக்கூடும். எல்லா நாடுகளிலும் எம்மைப் போன்று சிந்திப்பவர்கள் உள்ளனர். உதாரணமாக ‘நெப்ரஸ்டா’ என்ற அமெரிக்க படத்தைப் பார்த்தேன். அதுபோன்றே ‘ஹெட்டேல் புறீ பெஸ்ட்’ என்றொரு படம். அவை சாதாரண மனிதர்களின் வாழ்நிலை பற்றி, யுத்தம், முதலாளித்துவத்தின் வீழ்ச்சி பற்றி மிகவும் அனுதாபத்துடன் யதார்த்தப்பூர்வமாகச் சொல்லியிருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குமார் ராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’, நலன் குமாரசாமியின் ‘சூதுகவ்வும்’ போன்றவற்றைக் கூறலாம். இதில் காசை தேடி அலையும் நிலையை கேளிக்கையுடன் பார்க்கும் போக்கைக் காணலாம்.

வன்முறைகளினூடாக மக்கள் யதார்த்தத்தைப் பேசவிடாமல் தடுக்கும் போது வேறொரு விடயத்தைச் சொல்லி அந்த அரசியலைச் சொல்வது தான் ஈரானியப் படங்களின் தன்மை. அதை உங்கள் படங்களிலும் புரிந்துகொண்டேன்.

ஈரானியப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்திதான் எடுக்கப்படுகிறது. அதன் ஊடாக அவர்களின் அரசியல், சமூகப் பிரச்சினைகள் கதைக்கப்படும். நீங்கள் கூறியது போல் அதை நான் ஈரானிய, இத்தாலியப் படங்களிலிருந்து கற்றுக்கொண்டேன். இதை நாம் மினிமலிஸம் என அழைப்போம். மினிமலிஸம் என்பது பார்க்கும் போது ஒரு சிறுகதை போன்றுதான் இருக்கும். உதாரணத் திற்கு விக்டோரியா டிசிகாவின் பைசிகல், கிரஸ்தானி ஈரானியப்படங்களைக் குறிப்பிடலாம். உள்ளேதான் எல்லா சமூக விஷயங்களும் இருக்கும். பனிப்பாறையின் முனை போன்று மேலே தெரிவது கொஞ்சம்தான். உள்ளேதான் எல்லாம் மறைந்திருக்கும். நீங்கள் குறிப் பிடுவது சரி. எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது. தமிழ்நாட்டிலும்கூட இன்று உலக சினிமாவினால் ஈர்க்கப்பட்ட பல இளம் நெறியாளர்கள் இவ்வாறான மாற்று சினிமாவை நோக்கி நகர்வதைக் காணலாம். இதன் தாக்கத்தினால்தான் இன்று வழக்கமான வணிக சினிமா விலிருந்து மாறுபட்ட யதார்த்தத்தினை நோக்கி பல சினிமா கதைகள் வெளிவருவதை அவதானிக்கலாம்.
உங்கள் பார்வையில் அவ்வாறான சிலபடங்கள், நெறியாளர்கள் பற்றி குறிப்பிட முடியுமா?

குறிப்பிடலாம், ஆனால் இதை அவர்கள் விரும்பிச் செய்யவில்லை. மக்களிடம் இவ்வாறான திரைப்படங்களுக்கு வரவேற்பு உள்ளதால், அவற்றை வாங்கவும், விற்கவும் தயாராக உள்ளனர்.

நீங்கள் கூறினீர்கள் கஷ்டப்பட்டு தயாரிப்பதால்தான் இவற்றுக்கு ஒரு கௌரவம் உள்ளதென்று. ஆனால் ஒன்றை கூறவேண்டும். தமிழ்நாட்டு கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்பின்றி இதை என்னால் செய்யமுடியாது. உதாரணமாக ஸ்ரீகர் பிரசாத் போன்றவர்களின் உதவியைக் குறிப்பிடலாம். எனக்கு அங்கு சென்றவுடன் புதிய உத்வேகத்துடன் வேலை செய்யமுடிகிறது. இன்று முன்னெழுந்து வரும் இளம் நெறியாளர்கள் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சினிமாத்துறையின் தடைகளைத் தாண்டி யதார்த்த சினிமாவை முன்னெடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

பென்சிலும் பேனாவும் சாதாரண மக்கள் கைக்கு கிடைப்பதுபோல் கெமரா சாதாரண மக்கள் கைகளுக்கு கிடைக்கும்போதுதான் மக்களுக்கான படங்கள் வரும் என்பார் கோடார்ட். இன்று நிறைய பேரிடம் கெமரா உள்ளது. படங்களை எடுக்கிறார்கள். யதார்த்தம் தெரிகிறது. ஆனால் தியேட்டர்கள் பெரும் முதலாளிகளின் கட்டுப் பாட்டில் உள்ளன. அவர்கள் இதற்கு பெரும் தடையாக உள்ளனர். வணிகரீதியிலான படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்கும் இவர்கள் பெரும்பாலான திரையரங்குகளில் இவ்வாறான மாற்றுப் படங்களை திரையிடுவதற்கும் அனுமதிப்பதில்லை.

இலங்கையின் வட-கிழக்கில் நிறைய குறுந்திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் அங்கு சென்றபோது அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா?

முயற்சி செய்தேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறு சிறு பத்திரிகை விளம்பரங்களை எல்லாம் பார்த்தேன். ஆனால் எல்லா பகுதிகளிலும் குறும்படம், பெரும்படங்களை எடுக்கனும் என்கிற ஆர்வலர்கள் நிறைய பேரை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

நான் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்று ஒரு பயிற்சிப்பட்டறைக்கு சமூகமளித்திருந்தேன். எனக்கு நிறைய இளைஞர், யுவதிகளை பார்க்கும் வாய்ப்பு கிட்டி யது. அவர்கள் திரைத்துறையில் ஆர்வமாக உள்ளதை காணக்கூடியதாக இருந்தது. துரதிஷ்டவசமாக இலங்கை யின் திரைத்துறை சிங்களத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. இலங்கை சினிமா என்று கதைத்தாலும் அது சிங்கள சினிமாவாகவே உள்ளது. ஆகவே முழுமையான இலங்கை சினிமாவாக (Sri Lankan Cinema) இருக்கவேண்டும். எனவே எதிர்காலத்திலேயாவது யுத்தத்திற்கு முகங்கொடுத்த இந்த இளைஞர், யுவதிகள் தங்கள் அனுபவங்களை சினிமா மொழியில் பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அதுபோலவே மலையகத்தில் உள்ளவர்களும் இத்துறையில் செயலாற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் இலங்கை சினிமா என்பது முழுமை அடையும்.

அவ்வாறான ஒரு முயற்சியின் பகுதியாகவே நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்

அம்மாதிரியான எந்த முயற்சிக்கும் நான் எந்த நேரத்திலும் உதவத் தயாராக உள்ளேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நிறைய செயலமர்வுகள் நடத்தப் படுகின்றன. குறும்படம் தொடர்பாக நிறைய சஞ்சிகைகள் வெளி வருகின்றன. எல்லாவிதமான கருவிகளும் உள்ளன. பலரும் என்ன எடுக்கணும் என்று தெரியாத ஒரு குழப்பநிலையில் உள்ளனர். அவர்களின் சமூகப்பார்வை குறைவாகவே உள்ளது.
இலங்கையின் தென்பகுதியிலுள்ள இளைஞர்கள் மத்தியி லும் ஒரு அமைதியான நிலை காணப்படுகின்றது. சமூகப் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி தனிமைப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்கள் திரைப்படத்தில் புதுமைகளை புகுத்த விரும்பினாலும் நாட்டிலுள்ள பிரச்சினைகள் பற்றி கதைப்பதற்குத் தயங்குவதையும் காணலாம். பிரச்சினைகள் பற்றி கதைப்பதால் பயன் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வணிகப்படத்தின் சிறு பகுதியாகவோ அதை நோக்கிய முயற்சியாகவோ குறும்படங்கள் வருகின்றன. பெரும்பாலான படங்க ளில் அவற்றுக்குரிய தனித்துவம் இல்லை என்றே சொல்வேன்.

இந்த நிலைமை சர்வதேசரீதியாக காணப்படும் அரசியல் சூழ்நிலையால்தான் வருகின்றது. ஆனாலும் இந்த அரசியல் சூழலையும் மீறி சமூகப் பிரச்சினையானது ஒவ்வொரு தனிநபருக்கும் வருகின்றபோது அதிலிருந்து யாரும் தப்பி ஓடமுடியாது. அந்த நிலையில் ஒவ்வொரு வரும் சமூகப் பிரச்சினையை கதைத்தே ஆகவேண்டும்.

அது சரியான விடயம்தான். உங்களைப் போன்றவர்களின் நேரம் மிக முக்கியம். நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

எனக்கும் மகிழ்ச்சி. இப்படியான நபர்களான நாம் இணைந்து நல்ல ஆக்கங்களைத் தர முயற்சிப்போம்.

மொழியாக்கம்: சிவம்பிரபாகரன் ஆசிரியர் பெரட்டுக்களம்