சிறுகதைகள்

சிறுகதைகள்

மலையக சிறுகதை #4 தினமணிக்கதிர்

வாழையடி வாழையாய்

இலைகளில் பனித்துளிகள் பருக்கள் போல படர்ந்திருந்தன. காலைச் சூரியனின் வெளிச்சத்தை எதிரே கம்பீரமாய் நின்ற மலை மறைத்துக் கொண்டிருந்தது. வெயில் படர்கிற மரங்களைத் தேடி பறவையினங்கள் சோலையைவிட்டு பறந்து கொண்டிருந்தன. பாறைகளின் மேல் அமர்ந்திருக்கும் குருவிகள் இறக்கைகளைச் சிலுப்பி சுகமாய் வெயில் காய்ந்தவாறு ஒன்றுக்கொன்று தன் அலகுளால் கொத்திக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தன.
தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்த ஜனங்களின் குரலும் காற்றோடு மலைகளின் பரவ ஆரம்பித்தது. சரசாவும் ராமாயி அக்காவும் அவரவர் படங்கு சாக்குகளை உதறி இடுப்புக் கட்டிக் கொண்டிருந்தனர்.
‘அக்கா இன்னக்கி நம்ம தோட்டத்திற்கு புதுசா ஒரு ஆள் வரப்போகுது ஒனக்குத் தெரியுமா?”-சரசா.
‘ஆமாமா… கேள்விப்பட்டேன் அந்தப் புள்ள கல்யாணமாகி ஒரு மாசம்தானே ஆவுது? வீட்டிலேயே இருக்க போவுதுன்னு பேசிக்கிட்டாங்களே?” என்றாள் ராமாயி.
‘அட நீ ஒண்ணுந் தெரியாத மாதிரி பேசுற எங்கச் சுத்தினாலும் இந்தத் தேயிலை காட்ட விட்டா நம்ம பொம்பளைகளுக்கு வேற எடம் ஏது? நம்ம ஆம்பிளைங்களைக் கட்டிகிட்டா கலெக்டரு வேலையா பார்க்க முடியும்?” சரசா.
‘சரசா காலையிலேயே நம்ம லட்சணத்தைக் கௌராத….! கூடலூரிலிருந்து தொரராசு கட்டிக்கிட்டு வந்திருக்கானே அந்தச் செவத்த குட்டி தானே சொல்ற?”
‘ஆமா அவளேதான். வீட்டுல தேயிலை தோட்டத்திற்கு போகச் சொல்லிஅவ மாமியா பூர்ணவல்லி தெனமும் நச்சரிக்கிறாளாம்.!”-சரசா
‘பின்ன என்னதான் பண்ணச்சொல்ற.. நான் சொல்லிபுட்டா அப்புறம் கோவப்படுவ!” சொல்லிக் கொண்டே ராமாயி காலனியை நோக்கிப் பார்த்தால். தொலைவில் தோட்டங்களில் நீண்டு படுத்திருந்த குறுக்கு பாதையில் கவிதாவும், மலரும் வந்துக்கொண்டிருந்தனர்.
ராமாயியும் சரசாவும் நிரைப்பிடித்து கொழுந்து எடுக்கத் தொடங்கினர். இருவரும் ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்தான். ஒன்றிரண்டு கூடவோ குறையவோ இருக்கலாம். கொழுந்து எடுக்கும் அனுபவத்தையும் வருடத்தால் கூட்டிப்பார்த்தால் ராமாயிக்கு இருபதைந்து வருடம் இருக்கலாம்.
வீட்டிலேயே ராமாயிதான் மூப்பு, அவளுக்கு பின்னே இரண்டு தம்பி, மூன்று தங்கைகள் எல்லாருக்கும் அதிகபட்ச இடைவெளியே இரண்டு ஆண்டுகள்தான்.
ஒவ்வொருவருக்கும் ஆயா வேலை பார்த்து ஆளாய் தேத்தி எடுக்க பத்து வருடம் சுவடு தெரியாமல் ஓடிவிட்டது. அதன் பின் தேயிலைக் காட்டுக்குப் போய் மிளாறு கட்டிவருவது. பீலிக்கரைக்கிப் போய் பாத்திரம் துலக்கி தண்ணீர் பிடித்து வருவது. அப்பாவின் கவாத்து மலைக்குப் போய் தேத்தண்ணீர் கொண்டு போவது இப்படியாக ராமாயின் பருவ நாட்களை வேலை துரத்தி கொண்டு போய் விட்டிருந்தது.
‘நாலெழுத்துப் படிச்சா ஏதொ ஒரு வேலை தேடி பொழைச்சிக்கலாம். என்ன மாதிரி தேயிலைக் காட்டுல கெடந்து அல்லோல்பட வேண்டியதில்லை”. என்று அவளின் அம்மாதான் வலுக்கட்டாயமாக பதுளைக்குப் படிக்க அனுப்பி வைத்தாள். ஸ்கூல்லயே முதல் வகுப்பில் அவள் உருவம் தான் பெரியது. மாஸ்டர்கள் ‘பெரிய பெட்டை’ என்று அவளை அழைப்பார்கள். அவளின் உருவமும், வயதும் அவளின் இயற்பெயரையே மறைத்து பெரிய பெட்டை பேரே நிலைத்து நின்றது. அது கூட பரவாயில்லை, அந்தப் பெயர் தோட்டம் முழுவதும் பரவி லயத்திலும் பரவி இளந்தாரிப் பொடியன்கள் கிண்டல் செய்துவிட்டு லயத்து கோடிப்பக்கம் ஓடி ஒழியும் அளவுக்கு ஆகிவிட்டது.
அப்படி ஒரு நாள் பொடியன்கள் கிண்டல் செய்ய ‘நான் இனிமே ஸ்கூலுக்குப் போகமாட்டேன்” என்று படிப்பை நிறுத்தியவகளுக்கு பிறகு தேயிலைத் தோட்டமே கெதியானது. இந்தியா வந்தபோதும் கூட எங்கெங்கோ அலைந்து மீண்டும் தேயிலை தோட்டத்தையே தேட வேண்டிய நிலை. அவளுக்கு கல்யாணப் பேச்செடுக்கும் போது கூட எல்லோரும் ‘புள்ள நல்லா வேலையெல்லாம் பாக்குறா இவ மாதிரி கொழுந்து காட்டுல வேலை செய்யிறவனா பார்த்தா போதும் என்றனர். அப்படியே கணவனும் அமைந்தான். அவன் ஏதோ ஒரு மலையில் கவாத்து வெட்டுவான். ராமாயி ஒரு பக்கம் மலையில் கொழுந்து கிள்ளுவாள். பிள்ளை இரண்டு. அவர்களுக்கும் திருமணமாகி பேரப்பிள்ளை மூன்று கடந்து போன கல்யாண ஆண்டுகளோ இருபது.
ஏறக்குறைய இந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் சம்பளம், காலனி பீலிக்கரை, சமயலறை, எப்போதாவது மட்டும் நல்லது கெட்டதுகளுக்கு பந்தத்து ஊர்களுக்குச் செல்லுதல் என்பதைத் தவிர வேறெதுவும் பெரிதாக நினைவில் இல்லை ராமாயிக்கு எப்போதாவது தன்னை நினைத்துப் பார்ப்பாள். மிஞ்சுவது விரக்தியும் வேதனையும்தான். இப்போதெல்லாம் எதையும் நினைப்பதில்லை. ஆனாலும் அன்றைக்குப் புது ஆளைப் பற்றி சரசா பேச்செடுத்தவுடன் இதெல்லாம் நினைவுகளின் ஒன்றன் பின் ஒன்றாய் ராமாயியைப் படர்ந்தன.
மலையை அடைந்திருந்த மலரும் கவிதாவும் இடுப்பு கட்டிக் கொண்டிருந்தனர். கவிதாவுக்கு இடுப்புக் கட்டுவதில் அனுபவம் இருக்கவில்லை. குமரிப்பிள்ளையாக இருக்கும் போது ஸ்கூல் லீவு நாட்களில் மலைக்குப் போயிருக்கிறாள். அம்மாவோடு சேர்ந்து அவளும் கொளுந்து கிள்ளுவாள். பின் தேத்தண்ணீரைக் குடித்து முடிந்தும் வீட்டிற்கு விரட்டி விட்டு விடுவாள் அவளின் அம்மா. ‘போயி ஒழுங்கா படிக்கிறத பாரு. நீ கொழுந்து எடுத்து கிழிச்சது போதும்” இருப்பினும் அடம்பிடித்து கொஞ்சம் இலை எடுத்து விட்டுதான்’ வருவாள்.
ஸ்கூல்லேயே நாட்களை கழித்துவிட்டு லீவு நாட்களில் தேயிலைத் தோட்டங்களுக்கு போவது அவளை பொறுத்த வரை சுற்றுலா போவது மாதிரி, தோயிலைத் தோட்டங்களுக்கு போவதே தனி சுகம். அந்த உறவை மீண்டும் புதுபிக்க பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ‘ஏய் புதுப்பொண்று சீக்கிரம் இடுப்புக் கட்டிக்கிட்டு நிரையைப்பிடி” நிரையில் நின்றவாறு சரசா சொன்னாள்.
நிரையைவிட்டு குறுக்கு பாதைக்கு வந்த ராமாயி ‘புதுப்பொண்ணு அதுக்கு என்ன தெரியும்? நாமதான் சொல்லிக் குடுக்கண்ணும்” என்றவாறு கவிதாவிடம் சொன்னாள்.
‘நீ எதைச் சொல்ற” இரண்டு அர்த்தம் தொனிக்கிற பாவனையில் சரசா சொல்ல அனைவருக்கும் சிரிப்பு வந்தது. ‘ரெண்டையும்தான்” எ ன்ற ராமாயி கவிதாவைக் கூப்பிட்டு இடுப்பு கட்டி விட்டாள். இளமையும் வனப்பும் மகிழ்ச்சியும் அவள் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.; சிறு தூசி கூட படியாத வெள்ளி விளக்காய் அவள் பிரகாசித்தாள். இடுப்பைக் கட்டுவதற்கு ஏதுவாக நின்ற கவிதாவுக்கு இடுப்பு கட்டியவாறு ராமாயி இவற்றையொல்லாம் பார்த்தாள்.
அந்தப் பார்வை அனுமார் வாலாக எங்கொங்கோ இழுத்துக் கொண்டு போனது. தன் முதல் நாளில் தேயிலை தோட்டத்தில் கவிதாவைப் போலவே இடுப்பு கட்டத் தெரியாமல் முழித்தது. அவளின் கட்டுக்குலையாத உடம்பைப் பார்த்து எல்லோரும் கிண்டலடித்தது இப்படியாக அந்தப் பார்வை இந்த நினைவுகளில் நின்றது. இப்போதிருக்கும் ராமாயின் உடலையும் தன் இளமைக்கால உடலையும் ஒப்பிட்டால் அவளுக்கே எரிச்சல் வரும். எலும்புகளைப் போர்த்தியுள்ள தேகம். குழி விழுந்த கண்கள, ஒடுங்கிப்போன முகம, பாளம் பாளமாய் வெடித்து போயிருக்கும் கால்கள். தேயிலை கரையேறி காய்ச்சு கறுத்து ரோகை கூட அழிந்து போயிருக்கும் கைவிரல்கள்.
‘இச்சி என்ன பொழப்பு ….வயதானால் உடம்பு இளைக்கும் தான் அதுக்காக இப்படியா?” ராமாயி அவளுக்குள்ளே புழுங்கிக் கொள்வாள் தன் உடம்பைப் பார்க்கும் போதெல்லாம். இப்போது எதிரே நிற்கும் கவிதாவை இன்னும் பத்து வருடங்கள் கழத்துப் பார்த்தால்….. நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை அது.
அன்றைய பொழுது கவிதாவைப் பற்றிய கதையாவே இருந்தது. மதியச் சாப்பாட்டு நேரம் நெருங்கியதே தெரியவில்லை. எல்லோருடைய கூடைகளிலும் கிள்ளிய கொழுந்துகள் குழந்தை தூங்கும் தொட்டிலைப் போல தொங்கிக் கொண்டிருந்தன. கவிதாவின் பை மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்தது.
ஓடையில் கை கழுவி, அவரவர் சாப்பாடு டிப்பன்களுடன் பேரிக்காய் மரத்தினடியில் அமர்ந்தனர். கவிதா சாப்பாட்டில் கை வைக்க சற்றே கை எரிச்சலெடுக்க சாப்பாட்டில் கையை வைக்கமுடியாதபடி இருந்தது. நைந்துப்போன இளம் வெண்டைக்காய்களைப் போல அவள் விரல் மாறியிருந்தது. தேயிலைச் செடிகளின் வாதுகளிலும் காம்புகளிலும் பட்ட விரல் கொப்பளித்து… உடைந்து… இரத்தம்கசிந்து… விரலின் நிறம் மங்கி கவிதாவிற்கே அவள் விரலை பார்க்க எரிச்சலாய் இருந்தது. காலையில் முகம் கழுவும் போது பார்த்த விரல் தானா? என்று தனக்குள் சந்தேகித்தாள். ‘எல்லாம் ஒரு கெழமையான சரியாப் போயிரும் புதுசுதானே அப்படியே சாப்பிடு காரம் பட்டா சீக்கிரம் புண் ஆறிடும்”. சரசா தன் அனுபவத்தை கவிதாவுக்குப் பகிர்ந்தாள்.
சாப்பிட்டவாறு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமாயிக்கு கவிதாவின் நிலையைப் பார்க்க பரிதாபமாகயிருந்தது. களையிழந்து போயிருந்த அவளின் முகம்…எதை எதையோ நினைப்பதை தெரிவிக்கிற ஏக்கம் தோய்ந்த அவளின் கண்கள். கலகலப்பு பேச்சுகள் அடங்கி தடுமாறி வருகிற அவளின்; வார்த்தைகள.; அவளை எதைச் சொல்லி தோற்றுவது? ராமாயி தனக்குள்ளேயே யோசித்தாள்.
‘அட…. இதுக்குப் போயி இப்படி, உம்முனு இருக்கியே? இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா? போயிம் போயிம் ஒரு கொமரிப்புள்ளயா இப்படி…? அதை இதை யோசிக்காம சீக்கிரம் சாப்பிட்டு நிரைக்கிப் போங்க” என்று சொல்லிவிட்டு எதையும் யோசிக்காதவள் போல ஓடைப் பக்கம் டிபனை எடுத்துக் கொண்டு கை கழுவப் போனாள் ராமாயி.
தன் முதல் நாள் அனுபவம் எவ்வளவோ யோசிக்க வைத்தாலும் இனி யோசித்துப் பயனில்லை. மற்றவர்களையும் சங்கடபடுத்த வேண்டாம் என்று எண்ணிய கவிதா சாப்பாட்டை முடித்து கொண்டு எல்லோரும் போல நிரைக்குப் போனாள். சதை பியந்திருந்த விரல்களில் மலர் துணி சுத்திக் கட்டிவிட்டிருந்தாள்.
தான் இளமைக் காலத்தில் பார்த்த தேயிலை தோட்டத்திற்கும் அன்றைய அனுபவமும் இரு வேறாய் இருப்பதை கவிதா உணர்ந்தாள். அவளின் மனதில் புழுங்கிக் கொண்டிருக்கும் வேதனைகளை மறக்க ராமாயி, மலர் சரசா எல்லோரும் அவரவர் கதைகளை ஒவ்வொன்றாய்… சொல்ல… சொல்ல… சூரியன் மேற்குப் பக்கமுள்ள மலைகளின் பின்னால் ஒளிந்து கொள்ள இடம் தேடினான்.
எல்லோரும் எடுத்த இலைகளை சாக்கில் நிரப்பவும் முதலாளி கண்ணனின் ஜீப் தோட்டத்தை அடையவும் சரியாக இருந்தது. எல்லோரின் முணுமுணுப்புக் கூடஅடங்கிப் போனது.
‘ம்… பரவாயில்லை, போகப், போகப் சாpயாகிவிடும்” கவிதாவையும், அவள் விரல்களையும் ஒரு பார்வை பார்த்தவாறு ராமாயி கூறினாள்.
எல்லோருடைய கொழுந்து மூட்டைகளும் எடை போட்டு முடிந்து ஒவ்வொருவராக மூட்டையைத் தூக்கி கொண்டு பேக்டரிக்கு நடந்தனர். கவிதாவுக்கு மூட்டையைத் தலையில் வைத்தவுடன் கனம் தாங்காமல் உடல் நடுக்கமெடுத்தது. பூவின் கனம் தாங்காமல் நெளிந்திடும் காம்பைப் போல் அவள் உடம்பு ஆடியது. கண்ணணின் பார்வை எங்கெங்கோ மேய்ந்நதது. ஒரு நிமிடம் உலகமே ஆடிப்போனதைப் போல இருந்தது கவிதாவுக்கு.இதுவரை அந்த அளவுக்கு கனம் அவள் தலையில் வைத்ததில்லை. நடக்க நடக்க வேர்த்த வியர்வை முகம் …. கழுத்து …. நெஞ்சு …..என்று எல்லாப் பக்கமும் வழிந்தோடியது மட்டுமல்லாமல் ரவிக்கை சேலையெல்லாம் நனைந்தது.
கண்ணன் புறப்பட்ட ஜீப் ஒரு மலையைத் தாண்டி புள்ளியாய் மறைந்தது. அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை தொலைவில் தெரியும் ஃபேக்டரி அறிவித்தது. குறுக்குப் பாதை வழியாக மேடு பள்ளங்களில் ஏறி, இறங்கி நடக்கும் போது உயிh; போய் வந்தது கவிதாவுக்கு. அதைப் பற்றி யாhpடமும் சொல்லி ஒன்றும் ஆக போவதுமில்லை என்பது அவளுக்கு புரிந்து விட்டது. மற்றவர்களுக்கும் இப்படிதான் தேயிலைத் தோட்ட வாழ்க்கை தொடங்கியிருக்கும். இப்போது அதுவே பழகி மறந்து மரத்துப் போய்விட்ட பிறகு ஏன் பழைய நினைவுகளை கிளறுவானேன்? யோசித்து கொண்டே எல்வோருடனும் நடந்ததாள் ‘என்ன கவிதா? ரொம்ப கஷ்டமாயிருக்கா? தலை வலிக்குதா?” – ராமாயி.
‘ச்சே… இதெல்லாம் ஒரு பாரமா? நான் தூக்காததா? நீங்க ஒண்ணு பாரமாவது…தலைவலியாவது!… உள்ளுக்குள் குமைந்து சிரித்தவாறு சொல்ல ‘அட அப்படியா சங்கதி ஊ…உம்…சமத்து… சரிதான்!” ஒரே குரலாய் எல்லோரும் சொல்லி புன்னகைத்தவாறு நடந்தனா;. கவிதாவைப் போல எல்லோருடைய சிரிப்பும் போலியாகவே இருந்தது. மாலை மங்கத் தொடங்கியிருந்து. இரை தேடிய பறவையினங்கள் மரங்களில் அடைந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. குரங்குகள் இரவைக் கழிக்க உரிய இடம் தேடி மரக் கிளைகளில் தாவிக் கொண்டிருந்தன. கொழுந்து மூட்டைகளும் மலைப் பாதைகளில் நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தன.
– தவமுதல்வன்

மலையக சிறுகதை #3

வழுக்குமரம்

தேன்குடித்த வண்டினங்கள் பூக்களிலேயே மயங்கி கிடந்தன. எல்லா பூவினங்களும் இதழ்விரித்து மலர்ந்து தென்றலின் சிறு அசைவுகளுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தன. மரங்களின் உச்சிகளில் அமர்ந்தவாறு இறக்கைகளை சிலுப்பி பறவைகள் வெயில் காய்ந்து கொண்டிருந்தன. குரங்குகளின் நடமாட்டங்களில் கூட சுதந்திரமான நடவடிக்கைகள் தெரிந்தது. இவையாவும் இளவேனிலின் நடப்பை மலைகளை பார்க்க வருவோரிடம் மலைமகள் உணர்த்துவதாக இருந்தது.
இரவு மணி பத்தாகியிருந்தது. மாரியம்மனையும் முருகனையும் போற்றிப் பாடிக் கொண்டிருந்த டி.எம். சௌந்தாராஜனுக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி அஞ்சலிக்கும் மைக்செட்டுக்காரன் ஓய்வு கொடுத்திருந்தான். ஒருவேளை அதற்குமேலும் காவல்துறையின் ஒலிபெருக்கி அனுமதியிருந்திருந்தால் தொடர்ந்து அவர்கள் பாடிக் கொண்டிருந்திருப்பார்கள்.
அம்மாவாசை இருளில் ஆங்காங்கே மலைக்கிராமங்களில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு மின்மினிப் பூச்சிக் கூட்டங்களாக தெரிந்தன. சோலைகளின் குறுக்கே ஓடும் ஆற்று நீரின் சலசலப்பு ஓசைகளும் எங்கோ இணைதேடி கத்திக் கொண்டிருந்த வரையாடு ஒன்றின் சத்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க ஒரு சிறு கும்பலொன்று சோலைக்குள் ஊர்ந்தது.
டார்ச் லைட்டின் வெளிச்சம் நெளிந்துபோன வட்டங்களாக யூகலிப்டஸ் மரத்தோப்பில் இருளை துடைத்துக் கொண்டிருந்தது. சில டார்ச்லைட்டுகளின் வெளிச்சம் ஈட்டிப்போல் உயாந்தும் தாழ்ந்தும் வெயிச்சம் பாய பறவைகளின் சிறகடிப்பு சத்தம் கேட்டது.
‘ஆறுமுகம் இந்த மரம்தானே” கந்தன் ஆறுமுகத்தின் முகத்தை ட்டார்ச் லைட்டால் தொட்டுக் கேட்டான். ‘ ஆம் இந்த மரம்தான் ” உறுதியாகச் சொன்னான் ஆறுமுகம் பகலிலேயே அந்த மரத்தை அவர்கள் வனக்காவலன் அடையாளம் காட்ட பார்த்திருந்தனர்;. ‘நல்லாப்பாரு அப்புறம் அறுத்து தோலை உரிச்ச ஒடனே மரம் சின்னதா தெரியும் அப்புறம் ஊரே சண்டைக்கு வரும்” கந்தன்.
‘என்னப்ப நல்லா மரத்தை பார்த்திருங்க” மரத்தை சுற்றி நின்ற இளந்தாரிக் கூட்டங்களை பார்த்து மீண்டும் ஒருமுறை எல்லோருடைய சம்மதத்தையும் கேட்டார்; ஆறுமுகம். இருபதிற்கு மேற்பட்ட இளந்தாரிகள் மரத்தை அண்ணார்ந்து பார்த்து பெருமூச்சு விட்டனர்;. அந்த இடத்தில் வளார்ந்திருந்த மரங்களிலேயே அந்த மரம் தான் ஓங்கி உயார்ந்திருந்தது. ஒரு சிறு வளைவு கூட இல்லாமல் கனக்கச்சிதமாக நோர்கொண்ட மரமாக இருக்கவும் எல்லோருக்கும் பிடித்துப் போனது.
‘இது போதும் அண்ணே…இருங்க இந்த வருஷ வழுக்கு மரம் போல எந்த வருஷமும் அமையல சாமானியமா எவனும் ஏறமுடியாது” ஒருவன் பெருமைப்பட்டுக் கொண்டான்.
கந்தன் வாளை மரத்தின் அடியில் வைத்து இழுக்க இன்னொரு முனையை ஆறுமுகம் பிடித்து கொண்டு ஈடு கொடுத்து இழுத்தான். மரம் குலுங்கிக் கொண்டேயிருந்தது. அறுபடும் மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்துக் கொண்டிருக்க அப்பகுதி முழுவதும் தைல வாசனையும் மூக்கை துளைத்தது. அது அந்த மரத்தின் ரத்த வாடையாக கூட இருக்கலாம்.
மலையின் விளிம்பில் சமதளமற்ற நிலப்பரப்பில் தொங்கிக் கொண்டிருந்தது அந்தக் காலனி. இறைந்து கிடக்கும் தீப்பெட்டிகளைப் போல இருந்தது வீடுகள். அங்கு சமதளமாக இருந்த உருவாக்கிய ஒரே இடம் முருகன் கோவில் மைதானம் மட்டும் தான். அங்கே தான் அந்த வழுக்கு மரம் கிடந்தது. காலனி மக்களும் இளவட்டங்களும் மரத்தைச் சுற்றி ஈக்கள் போல கூடிப் பேசிக் கொண்டனர் அதன் பெருமையை மரத்தின் கம்பீரமான தோற்றம் வழுக்கு மரப் போட்டிக்கு எதிர்பார்ப்பை மேலும் கூட்டிவிட்டிருந்தது.
இன்னும் ஒரு நாள்தான் இருந்தது வழுக்கு மரப் போட்டிக்கு அதற்குள் அதன் தோல்பட்டைகளை உரித்து, கிரீஸ் தடவி நல்லெண்ணையால் மரத்தை பூசி அதன் வழுவழுப்பை கூட்டி, மரத்தை நிமிர்த்த வேண்டி வேலையிருந்தது. அந்த மரம் பல கிலோமீட்டர்களைக் கடந்து காலனியை வந்தடைய பட்டபாடு சொல்லி மாளாது. கந்தனின் தோள், கை, கால்கள் எல்லாம் தேயிலைச் செடிகளின் கீறலும் உராய்வுகளும் பட்டு பல காயங்களை உருவாக்கி விட்டிருந்தன. வளைந்து நெளிந்த குறுகலான குறுக்குப் பாதைகளில் மரத்தை சுமந்து வருவதற்குள் எல்லோருக்கும் போதும்போதும் என்றாகிவிட்டது. வயதும் அனுபவமும் முதிர்ந்திருந்த கந்தனும் ஆறுமுகமும் தன் தன்னிரு தோள்களால் அதிகம் தான் தாங்கி காலனிக்கு சேர்த்திருந்தனா;. அந்த மரத்தை கந்தனின் மனைவி திட்டிக் கொண்டேயிருந்தாள்.
‘ஊரை விட்டு வெளியில போன நம்மள சிலோன்காரன்னு கேவலமான பேசுறான். ஊருக்குள்ள நம்ம ஜனமே நம்மள குடியானவன் இல்லனு பேசுது. இந்தக் காலனி ஜனத்திற்கு போயி வழுக்குமரம் செமக்காட்டி எந்த சாமி கோவிச்சுக்கும்”?? தெய்வானை பொரிந்து தள்ளினாள்.
‘அட அத வுடு பொழுது விடிஞ்சா எல்லோரும் தேயிலைக் காட்டுலதான் முழிக்கனும் இதுல… நான் பெரியவன்… நீ பெரியவன்னு அவங்க நெனச்சா அவங்கள யாரு கணக்கு எடுப்பாக ?கந்தன் இப்படிதான் பல நேரங்களில் தெய்வானையை சமாதனம் செய்து சாந்தப்படுத்துவான். அன்றும் அப்படிதான்.
திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் காலனியை அமர்களப்படுத்திக் கொண்டிருந்தன. உரியடித்தல், ஊசிநூல் கோர்த்தல், பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம் என போட்டிகளும் மகிழ்ச்சியின் தருணங்களும் அணிவகுத்தன. மைக்கில் தட்டு தடுமாறி வர்ணணை செய்துக் கொண்டிருந்தவனின் சத்தம் மலையெங்கும் எதிரொலித்தது. பக்கத்து கிராமத்து ஜனங்கள் ரசித்து கொண்டே தேயிலைத் தோட்ட நிறைகளில் ஊர்ந்து கொண்டிருந்தனர்.
நான்காம் நாளின் நிகழ்ச்சியை கம்பீரமாய் வழுவழுப்பாக நின்றுக் கொண்டிருந்த வழுக்குமரம் முடிவு செய்திருந்தது. பட்டைகள் உறிக்கபட்ட மரம் ராட்சத வாழைத்தண்டு போல மைதானத்தின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. கிரீஸ் (உயவு எண்ணெய்) நல்லெண்ணெய், விளக்கெண்ணை இவற்றோடு கடுகு பூசப்பட்ட வழுவழுப்பில் மின்னிக்கொண்டிருந்தது. பட்டை உரிக்கபட்ட மரத்தில் ஈரப்பதம் காயாமலேயே எண்ணெய் தடவப்பட்டிருந்தால். மரத்தில் சாதாரணமாக ஏறமுடியாது என்று ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த போட்டிக்கான பரிசுத்தொகையை கோவில் கமிட்டியினர் ஆயிரம் ரூபாய் கொண்ட பணமுடிப்பாக உச்சியில் கட்டிவிட்டிருந்தனர்.
எல்லாப் போட்டிகளும் முடிந்த நிலையில் இறுதியாக வழுக்குமரம் போட்டி ஆரம்பமாகி விட்டிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் துணிகளை அவிழ்த்துவிட்டு கைலிகளை கோவணமாக கட்டிக் கொண்டவர்களும் அரைடவுசரோடு மரத்தை சுற்றி நின்ற இளந்தாரிக் கூட்டங்களும் போட்டி போட்டு கொண்டு ஒருவர் மேல் ஒருவராக ஏறவும் வழுக்கிக் கொண்டு விழ ஊரே சிரித்தது. மைக்கில் வர்ணனை செய்துக் கொண்டிருந்தவன் கூட வெடிச்சிரிப்பை அவ்வப்போது வர்ணணையிடையே சிரித்து வைத்தான்.
கந்தனுக்கும் ஆறுமுகத்துக்கும் ஏற்பட்டிருந்த காயங்கள் தேங்காய் எண்ணெய் தடவி வலி குறைந்திருந்தாலும் சட்டை கூட போட முடியாத நிலையிலிருந்தனர். ‘நல்ல நாளு அதுவுமா ஒடம்புல சட்ட கூட போடாம இருக்க கூடாது சட்டையில் எண்ணெய் ஒட்டுனா பரவாயில்ல தொவைச்சிகலாம் சட்டைய போட்டுக்கிட்டு நடமாடுங்க நாலு ஜனம் வாற நாள்” தெய்வானை கெஞ்சிப் போட்டுவிட்டிருந்த சட்டையோடு மைதானம் வந்த கந்தன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் அவன் கூர்ந்து கவனித்த ஒரு இளந்தாரி தன் ஒரே மகனான குமாரைத்தான். முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தவனை பலரும் காலைப் பிடித்து இழுப்பதும் வேண்டுமென்றே அவன் தலையில் கால் வைத்து ஏறுவதுமாக பலர் நடந்து கொண்டதைப் பார்த்து அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
ஒருவர் தோளில் ஒருவராக கூட்டணி சேர்ந்து ஏறிக்கொண்டிருக்க மரத்தின் அடிப்பகுதியில் நின்றிருந்த ஒருவன் கணம் தாங்க முடியாமல் உட்கார்ந்தே விட்டான். நூலிலிருந்து பாசி மணிகள் உறுவிக் கொண்டு விழுவதைப் போல மரத்திலிருந்து வழுக்கி அடியில் ஒருவர் மேல் ஒருவராக குவிந்தனர். வெகு நேரமாக நடந்து கொண்டிருந்த வழுக்கு மரப் போட்டியில் மரத்தில் பூசப்பட்டிருந்த எண்ணெய்யும் கிரீசும் ஆளாளும் தன் பங்கிற்கு ஏற்குறைய உடலால் தொடைத்து எடுத்து விட்டிருந்தனர். கூட்டமாக ஜோடிகளாக ஏறுவது தவிர்த்து பலர் தனித்தனியாக ஏறிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தவர் சோர்ந்து போயிருந்தனர். கழுத்து வலி எடுக்க அண்ணாந்து பாத்தவர்கள் எப்போதாவது மட்டுமே மரத்தைப் பார்த்தனர். கந்தன் மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தார்;. குமாரின் விடாமுயற்சி மரத்தின் உயரத்தில் முக்கால் பாகத்தை தாண்டி நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தான். அவன் உயர உயர பலருக்கு மனம் வெறுப்பின் திசைகளை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘அவன் பரிசுப் பணத்தை எடுத்தாலும் எடுத்திருவான் போல இருக்குடா… நம்ம கௌரவம் போகப் போவுது” என பலரிடம் புறப்பட்ட வாக்கியம் தொண்டைக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
குமார் பரிசுப் பணத்தை நெருங்க…நெருங்க…அவர் உடம்பில் குடிகொண்டிருந்த காயத்தின் வலியும் எரிச்சலும் இலவம் பஞ்சாக விலகிக் கொண்டிருந்தது கந்தனுக்கு வழக்கத்திற்கு மாறாக வர்ணனையாளின் குரலோ அமுங்கிப் போயிருந்தது.
இன்னும் ஒரு ஒரு அடியை கடந்து விட்டால் பணம் குமாரின் கைக்கு அகப்பட்டுவிடும். பணத்தை விட அவன் தொடப்போகும் உயரம்தான் ஆறுமுகம் கந்தன் தெய்வானை வைக்கவும் எல்லோரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட அவர்களை சார்ந்தோருக்கும் மறக்கமுடியாத பண்டிகையாக கூட அமையும்.
அதுவரை சோர்ந்து போயிருந்த இளந்தாரிகள் கூட்டம் ஒன்று முண்டியடித்து ஒருவர் தோளில் ஒருவராக ஏறி நின்று தன் முழு பலத்தையும் காட்டி குமாரை நெருங்கி… ஒவ்வொருவராக உயர்ந்து குமாரின் கால்களுக்கு இடையில் மரத்தை கட்டிப்பிடித்து உயர மொத்தமாக வழுக்கிக் கொண்டு கீழே விழுந்தனர். குமாரும் அவர்களோடு கீழே இழுக்கப்பட்டு மரத்தின் அடிக்கு சேர்ந்திருந்தான். ஓரிரு நிமிடங்களில் குமாரின் கையில் கிடைக்க வேண்டிய பரிசுப்பணமும் உயரமும் கனவுகளும் விலகிப் போயிருந்தது. மரத்தின் பூசப்பட்டிருந்த எண்ணெய்யும் கிரீஸ்சும் குமாரின் டவுசராலேயே மொத்தமாக துடைக்கபட்டிருந்தது. விடாது மீண்டும் முண்டியடித்து ஏறினான். விளையாட்டோடு விளையாட்டாக அவனை சீரழிக்கிற கூட்டம் அவனை தள்ளி விட்டு மீண்டும் ஏறியது. அதிலொருவன் வேகமான மேலேறி விட்டான். வழுவழுப்பை இழந்திருந்த மரத்தில் ஏறுவது அவனுக்கு இலகுவாக இருந்தது. கூட்டம் ஆப்பரித்து வர்ணணையாளன் உற்சாகம் அடைந்து உரக்க கத்தினான்.
‘இந்த தடவையும் நம்மபசங்ளே எடுத்துட்டோம்ல யாருகிட்ட…” பலர் மீசை முறுக்காத குறையாக இருமாப்படைந்தனர். குமாரும் ஏற முயன்று கொண்டேயிருந்தான். ஒரு கூட்டம் அவனோடு போட்டி அடிமரத்திலேயே ஒருவர் காலை ஒருவர் பிடித்து ஏற விழுந்து கொண்டிருந்தனா;.
மேலே ஏறியவன் பரிசுப்பணத்தை எடுப்பதற்கு சில நிமிடங்கள் இருந்தன. ஊருக்கே செய்தி பரவியது. ஆறுமுகனும் கந்தனும் மாறி மாறி முகங்களை பார்த்துக் கொண்டனர். தெய்வானை அந்த இடத்தை விட்டு போயிருந்தாள்.
பரிசுப்பணம் எடுக்கப்பட்டவுடன் வர்ணனையாளன் ஆங்காரமாய் கத்தினான். அவன் உருவிக் கொண்டு கீழிறங்க அவனை தோளில் தூக்கி மாலைப்போட்டு ஆர்ப்பரித்து கோயிலை சுற்றி வந்தனர். அவர்கள் குமாரை நோக்கி ஒரு ஏளனப் பார்வையும் தவறாமல் பார்த்தனர். கந்தனின் அருகே வந்த குமாரின் கண்கள் கண்ணீரைச் சுரந்து கொண்டு வர அதை பார்க்க முடியாமல் அருகே நின்ற ஆறுமுகம் முகத்தை திருப்பிக் கொண்டான். கந்தன் குமாரின் தோளை வாஞ்சயோடு அணைத்து நடக்க தொடங்கினார். அவரின் உடம்பு முழுவதும் காயங்கள் தீயாய் எரியத் தொடங்கியிருந்தது. அந்த வழுக்கு மரத்தை அண்ணார்ந்து பார்த்தார். நிர்வாணமாய் நின்ற அந்த மரம்போலவே அந்த கூட்டமும் தெரிந்தது அவருக்கு!.

தவமுதல்வன்

மலையக சிறுகதைகள் – 2செல்லாத காசுகள்

எல்லாரும் சாப்பிட்டு அப்புறம் எடுங்க போதும்… ம் நிறுத்துங்க” வேலு கங்காணி சத்தமிட அவரவரும் சாலிலிருந்து கொழுந்தை எடை போடும் கூட்டத்திற்கு வந்தார்;. அதிகாலை ஆறு மணியிலிருந்து கொழுந்து எடுக்க ஆரம்பித்த கைகள் பனியால் விறைத்துப் போயிருந்தன. நகக் கண்களுக்குள் ஊசி குத்தியதைப் போல வலித்தது பாh;வதிக்கு. காய்ச்சு போயிருந்த சில விரல்களில் இரத்தம் கசிந்தது. ஆனாலும் பவுன் காசை நினைக்கும் போது எல்லா வலிகளும் பறந்து போனது.
இந்த ஒரு கெழமையாகவே தோட்டத்தில் வேலை அப்படித்தானிருந்தது. தேயிலைக் கொழுந்துகள் அதிகமாக வளா;ந்திருந்தன. அவை கொழுந்திலேயே பக்குவமாய் கிள்ளி எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் கோசாகி போய்விடும். எனவே வேலை நேரம் போக மற்ற நேரங்களில் பவுன் காசிற்கு இலை எடுக்கச் சொல்லியிருந்தார் தோட்டத்தின் முதலாளி நஞ்சன்.
மணி எட்டாகியிருந்தது. ஒவ்வொருவரும் எடுத்த கொழுந்தை எடை போட்டார்; வேலு கங்காணி. தராசின் முட்களைப் போல ஒவ்வொருவருக்கும் மனசு அலைந்தது. எடையை குறைத்து சொல்லிவிடுவாரோ? தண்ணீர் நிற்கிறது என்று எடையிலிருந்து கழித்து விடுவாரோ? என ஒருவித பயமும் இருந்தது எல்லோருக்கும். பார்வதியின் பெயருக்கு 20 போக கூடுதலாக கொழுந்து பத்து கிலோ இருந்தது. அப்பாடா மனதிற்குள் மலைப்பாய் இருந்தது அவளுக்கு. கிலோவிற்கு ஒரு ரூபாய் என்றால் கூட பத்து ரூபாய் கிடைக்கும்! ரெண்டு கிழமையாக எடுத்த அறுபது கிலோவிற்கும் …. நினைவலைகள் அவளுக்குள் படா;ந்தது. மாத்திக்கட்டிக் கொள்ள ஒரு பாவாடை வாங்க வேண்டும். ஒரு நல்ல ரவிக்கை துணி வாங்க வேண்டும். கிழிந்ததையே எத்தனை நாளைக்கு போட்டியிருப்பது? மீதிப்பணமிருந்தால் ஒரு கம்பளி வாங்க வேண்டும். கிழிந்து போனதையே போர்;த்தி…. போர்த்தி எத்தனை நாளைக்கு குளிரில் நடுங்கி தூக்கம் கெடுவது…? தேத்தண்ணி கொண்டுவர ஒரு சுடுத்தண்ணி போத்தல் வாங்க வேண்டும் எவ்வளவு நாள் தோட்டத்தில் நாக்கு வரண்டு இலை எடுப்பது?.
ஏக்கமும் இயலாமையும் ஒன்று சோ;ந்து கேள்விகளாய் படா;ந்தன அவளுக்குள் எப்படியும் ஒரு மாதம் பவுன்காசிற்கு கொழுந்து எடுத்தால் இந்த கஷ்டங்களையெல்லாம் தீh;த்துவிடலாம் என்று தனக்குள் உறுதி செய்து கொண்டாள்.
டிப்பன் பாக்சை திறந்தாள் அவதியாய் கட்டியிருந்த ரேசன் அரிசி சோறு விறைத்துப்போயிருந்தது. சுட வைத்துதான் சாப்பாடு கட்டியிருந்தாள் பனிக்காற்றிற்கும் அடிக்கிற மழைச் சாரலுக்கும் எவ்வளவு நேரம் சூடு நிற்கும். சோற்றில் கை வைத்ததும் பனித்துன்டுகளை தொடுவது போல இருந்தது சாப்பாடு. என்ன செய்வது….! ருசிக்கு சாப்பிட முடியுமா!? பசிக்கு ரெண்டு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டாள். ராமாயி அக்காள் கொஞ்சம் தேங்காய் சம்பலும் ரொட்டியும் தந்தாள். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பார்வதி எழுந்து விடுவாள். பீலிக்கரைக்கு போய் பாத்திரம் விளக்கி தண்ணீர் பிடித்து சமைத்து…. தோட்டத்திற்கு சாப்பாடு கட்டி ஐந்து மணிக்கெல்லாம்; புறப்பட்டால்தான் ஆறு மணிக்கு கொழுந்து எடுக்கும் தோட்டத்தை அடைய முடியும். ஆறுகளை தாண்டி முழங்கால் வலியெடுக்கும் அளவிற்கு மேடுபள்ளங்களை பாதைகளை கடந்து சோலையோரப் பாதைகளை மிருகங்களுக்கு பயந்து வேகமாக நடந்தால்தான் குறித்த நேரத்திற்கு தோட்டத்தை அடைய முடியும். முருகன் இருந்திருந்தால் காலையில் கூடமாட உதவியாய் இருந்திருப்பான். ஒரு நாள் மாலை கவாத்து வெட்டிவிட்டு வந்தவன் நெஞ்சு வலிக்குது என்று படுத்தவன்தான் அக்கம் பக்கத்து ஆட்களை கூட கூப்பிட நேரம் வைக்காமல் இறந்து போனான். அதன் பிறகு பனிரெண்டு வயதான தன் ஒரே மகனுடன் காலத்தை தள்ள வேண்டிய நிலை பாh;வதிக்கு அப்போதே தானும் செத்துப்போய் விடலாமா? என்று கூட நினைக்க தோன்றியது பார்;வதிக்கு. மகனின் நிலையை நினைத்த போதுதான் வாழ வேண்டும் என்கிற நிர்;பந்தத்திற்கு தள்ளப்பட்டாள்.
மணி பனிரெண்டாகியிருந்தது. காலையிலிருந்து எடுத்த கொழுந்தை பேக்டரியில் சோ;ர்த்துவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு எல்லோரும் திரும்பிக் கொண்டிருந்தனர்;. கொழுந்தெடுக்கும் தோட்;டமும் தேயிலைப் பேக்டரியும் நீண்ட தூரங்களுக்கு இடையில் இருந்தன. காலையில் நடப்பது போதாதென்று அதிகமாக கொழுந்து எடுக்கும் நாட்களில் இப்படியும் வேறு நடக்க வேண்டும். மதியத்திற்கு பின்னால் எடுக்கிற இலையை சாயங்காலம் வேறு பேக்டரிக்கு கொண்டு வர வேண்டும்.
எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நடந்து நடந்தே பாதி ஆயுள் போய்விடும். எப்பதான் இதுக்கெல்லாம் விடிவு வருமோ தொpயவில்லை என்று மற்றவா;களோடு சோ;ந்து பார்வதியும் புலம்பிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அல்லது தெரியவில்லை.
நான்கு கிழமைகள் கரைந்துபோய் ஒரு மாதமாகியிருந்தது. வழக்கத்தை விட இந்த ஒன்னாந் தேதியை ஆவலுடன் எதிர்;பார்த்திருந்தனர்;. இந்த மாத சம்பளத்துடன் பவுன் காசும் அதிகமாக கிடைக்கும் என்கிற எதிர்;பார்ப்புதான் அது. பார்வதி காலையில் வரும் போதே கரிக்கோட்டில் சுவரில் எழுதி வைத்திருந்ததை கூட்டி மொத்த கிலோ கணக்கை மனப்பாடம் செய்து அடிக்கடி ஞாபகப்படுத்தி கொண்டாள். சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் சம்பளம் கைக்கு வந்து விடும்.
ஒவ்வொருவருக்கும் அதை நினைக்கவே சந்தோசமாகயிருந்தது. எல்லோருடைய சந்தோசத்தை காட்டிலும் பார்வதிக்குதான் அதிகமாக இருந்தது. இந்த மாதச் சம்பளம்தான் பல கனவுகளை நிறைவேற்றப்போகும் சம்பளம். நாளைக்கு சம்பளத்துடன் சந்தைக்கு போனால் கம்பளி பாவாடை ரவிக்கை டிப்பன் இன்னும்…. நிறைய
சாயங்காலமாகியிருந்தது. தேயிலை பேக்டரிக்கு முன்னால் முதலாளிமார்களும் காக்கிடவுசர் மேஸ்திரிகள் செக்ரோல் புத்தகமுகமாய் அவரவரும் திரிந்து கொண்டடிருந்தனர்;. சிலர்; சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
வேலு கங்காணி பெயர்; வாசிக்க எல்லோரும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். பார்வதியின் முறை வந்தது. வாங்கி எண்ணிப்பார்;த்தாள். போன மாத சம்பளம் போலவே தொகையிருக்க ஒரு கணம் நெஞ்சு படபடத்து வியா;க்க ஆரம்பித்தது. மற்றவர்களின் முகத்தை பார்த்தாள். அவளைப் போலவே எல்லாரும் பதைபதைப்புடன் இருந்தனர்;. திரும்ப திரும்ப சம்பளத்தை எண்ணிப்பார்தனர். ஏமாற்றம்தான் மிஞ்சியது.
‘என்னம்மா எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க போல! உங்களுக்கு பவுன்காசு சம்பளத்தோட இல்லையேன்னு தானே? இந்த மாசம் எலைக்கு வெலை குறைஞ்சு போச்சும்மா அதான் சம்பளம் மட்டும் போட்டிருக்கேன். அதுக்கு மேலே என்னால எதுவும் குடுக்க முடியாது திடீர்னு ரேட் குறைஞ்சு போனா நான் என்ன பண்ணமுடியும்”?. ஆணி அடித்தார்; போல பேசி முடித்தார் முதலாளி நஞ்சன். கங்காணி எதைபற்றியும் கண்டு கொள்ளாததைப் போல் நின்றுக் கொண்டிருந்தான்.
பார்வதியின் கனவுகள் ஒவ்வொன்றாய் நொறுங்கிக் கொண்டிருந்தன. என்னவெல்லாமோ திட்டி பேசி கத்தி அழுது தீர்த்துக்கணும் போலிருந்தது. வந்த வார்த்தை தொண்டைக் குழிக்குள்ளும் பெருகிய கண்ணீர்; இமையோடும் நின்றுவிட ஒரு நீண்ட பெரு மூச்சுடன் வீட்டை நோக்கி நடந்தாள். அந்த நடை தளர்ந்து போயிருந்தது.
-தவமுதல்வன்

LikeLike · · Promote ·

அம்மாவின் இருப்பிடம்

இலக்கிய சிந்தனை விருது பெற்ற கதை.

கல்கி 2009

நல்லாத் தூங்கிப் போயிட்டேன். இன்னும் சத்த நெரம் கண்ணசந்து தூங்கியிருக்கக்கூடாதான்னு தோணுது. நான் நெனைச்சு என்ன பன்ன?
ரோடு குண்டும் குழியுமா இருந்தா வண்டி தூக்கித் தூக்கிப் போடத்தானே செய்யும். எப்போ முழிப்பு வந்திச்சே அப்பவே விளையாட்டு மைதானம் கண்ணுல வந்து ஒட்டிக்கிச்சு. ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறேன். பஸ் கருவேலங்கொளத்தத் தாண்டிப் போய்க்கிட்டிருந்திச்சு. முன்னெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் மறுகரையே தெரியாம தண்ணி நெறஞ்சு கெடக்கும். கருவேல மரமெல்லாம் கழுத்த நீட்டிக்கிட்டு நிக்கும். கொக்கு நாரை கூட்டம் கூட்டமாய் பறக்க அதை அழகை பார்க்க எனக்கே அதிசயமா இருக்கும். ஆனால் அதே கொளந்தான் இப்ப கிரிக்கெட்டு மைதானம்… பார்க்கவே வெறுப்பா இருக்கு. இனி எங்க ஊரு போயி அந்த மைதானத்துல முழிக்கிற வரை கையும் ஓடாது காலும் ஓடாது. கண்டக்டர் ஸ்டாப்பில் நிறுத்தும்பொழுதெல்லாம் கோவம் கோவமா வருது. இன்னும் அரைமணி நேரமாவது ஆகும். என்ன பண்ண, கண்ணை மூடிக்கிட்டுத் தூங்க சீட்டுக் கம்பியில சாஞ்சேன்.
”ஏம்பா … தம்பி… பனங்குளம் வந்தாச்சு எறங்குப்பா…. நல்லாத் தூங்குறியே?…,” கண்டக்கடர்.
பஸ்ஸை விட்டு இறங்கின உடனேயே என்னோட படிச்ச பசங்களெல்லாம் டீக்கடை பெஞ்சுல ஒக்காந்து இருந்ததைப் பார்த்திட்டேன்.
”டேய் வாடா குமாரு… எம்புட்டு நாளாச்சு பார்த்து. பரீட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியாடா?,” என்றான் ஒருவன்.
”ம்.. ” பேச வரமாட்டேங்குது.
”இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்க… என்னடா பேசக்கூட மாட்டேங்கிறே?” – இது இன்னொருவன்.
”இல்லடா பஸ்ல வந்த களைப்புடா… அப்புறம் பேசிக்கலாம்டா நான் வரட்டுமா?”
அவதி அவதியா பக்கத்து வீட்டு ரவியோட யமஹாவில ஏறிக்கிறேன். போகும்பொது எதுக்கால வர்றவகெல்லாம் என்னையத் திரும்பி திரும்பி பாக்குறாக… கணக்கா அடையாளம் கண்டவக மட்டும் கையைக் காட்டி அவுக அன்பை வெளிப்படுத்துறாக.
ரவி என்னை வீட்டுல கொண்டு போய் விடுறான்.
அப்பா, சித்தி பக்கத்து வீட்டுக்காரக எல்லாம் விசாரிச்சு முடிச்சாச்சு. எம் மனசுதான் எதுலேயும் ஒட்டல. ”டேய் பஸ்ல வந்தது பயணக் களைப்பாயிருக்கும். குளிச்சிட்டு சாப்பிட்டுத் தூங்கு. அங்க இங்க சுத்தாத. நா கொல்லைக்குப் போயிட்டு வாரேன் ”. கடுகடுப்பா சொல்லிட்டுப் பொறார் அப்பா. பஸ்ஸை விட்டு எறங்கினதும் என் பிரண்டுக எங்கிட்ட பேசினப்ப அவங்க மொகத்துல இருந்த சந்தோஷம் கூட என் அப்பா மொகத்துல காணோம். ”ச்சே.. என்ன மனுசன்? எனக்குள்ள நொந்துக்கிறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?. பேசாம மைதானத்துக்கே போயிட்டேன்.
”டேய் வாடா… வாடா.. நல்லாயிருக்கியா … பரீட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியா…? எல்லோரும் ஒட்டு மொத்தமா கேக்கிறாக. என்னையும் விளையாடக் கூப்பிடுறாக. ”இல்லடா நான் சும்மாதான் வந்தேன். நீங்க விளையாடுங்க. நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்றேன்.
மைதானமே இரைச்சலா இருக்கு. ரொம்ப மும்முரமா எல்லோரும் விளையாடுறாக. நான் மட்டும் மைதானத்தோட நடு எடத்தையெ பார்த்துக்கிட்டிருக்கேன். அவர்கள்லெல்லாம் விளையாண்டு முடிச்சு களைச்சுப் டேய் வாடா போலாம்”னு என் முதுகுல தட்டினதும்தான் எனக்கு அவங்க நெனப்பே வந்துச்சு.
வீட்டுக்கு வந்து திண்ணையில் படுத்தேன். வெளியில ஏறு வெயிலாயிருந்தது. சுவத்துல தொங்குற என்னொட பள்ளிக்கூடத்து குரூப் போட்டோவைப் பாக்குறேன்.மைதானத்துல விளயாண்டவங்கெல்லாம் கால் சட்டையோட நிக்குறாங்க ,என் தலையில தேய்ச்சிருந்த எண்ணை மூஞ்சியெல்லாம் வழிஞ்சிட்டுருக்கு.சர்க்கஸ் கோமாளி மாதிரி மூஞ்சியெல்லாம் பவுடர் வேற. அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் என்னோட அம்மா எங்கூடவே இருக்கிற மாதிரி இருக்கும். ”மொட்ட வெயில்ல சுத்தாத தங்கம்… ஒனக்கு ஏதாவது சவுரியமில்லாம பொச்சுன்னா அம்மாதானே சிரமப்படுவேன்” இப்படி சொல்லிக்கிட்டெ வேப்பெண்ணையை தேய்ச்சுவிடும். காலையில எந்திரிச்சு ராத்திரி தூங்குற வரைக்கும் குமாரு குமாருதான். ஒரு நாளைக்கு நூறு தடவையாவது கூப்பிட்டுரும்.
கொஞ்ச நேரம் என்னை விட்டிட்டு இருக்காது. அது போதும்ங்கிற வரைக்கும் எந்தச் சோலின்னாலும் கூடவே இருந்து பார்த்து ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கும். ராத்திரியான அம்மாவோட கொடங்கையிலதான் சுருண்டு படுத்துக்குவேன்.
வீட்டுக்குள்ள அப்பாவும் யாரோ ஒரு பொம்பள ஆளும் பெசிக்கிற பேச்சும் சிரிப்பும் கேட்டுகிட்டேயிருக்கும். சில நாள்ல அம்மா செருமி அழுகுறதைப் பார்த்திருக்கேன். எங்கூட படிக்கிற பசங்களோட அப்பால்லாம் அவங்களை ஆசை ஆசையாக கையப் பிடிச்சு கடைத்தெருவுக்கு… திருவிழவுக்கு கூட்டிப் போறதையும் சிரிச்சுப் பேசுறதையும் பார்த்திருக்கேன். ஆனா என்னோட அப்பா காதைப் பிடிச்சுத் திருவதையும்… புளியங்குச்சியாலே தொரத்தி தொரத்தி அடிக்கிறதும்தான் எனக்கு நடந்துச்சு. சரி நான்தான் குறும்புகாரன்னு கூட சொல்லிக்கலாம். அம்மா என்ன பாவம் செஞ்சா? அப்பா வீட்டுக்குள்ள நொழஞ்சா போதும் அம்மா வீட்டுக்குள்ள இருக்கிற இடமே தெரியாது. அப்பாவோட மொகத்தை அம்மா நிமிர்ந்து பார்த்ததை நான் ஒரு நாள் கூட பார்த்ததே கிடையாது.
ஒருநாள் ஏதோ தைரியத்துல ஏதோ ஒரு வார்த்தையை அம்மா பேசிட்டா. பெல்ட்டை உருவி பலம் கொண்ட மட்டும் துரத்தித் துரத்தி அடிச்சார். அக்கம் பக்கத்து வீட்டுக்குள்ளேயெல்லாம் ஓடி ஒளிஞ்சும் விடல.. களைப்பு வர்ற அளவுக்கு அடிச்சிட்டு ”இனிமே நீ வீட்டுல இருக்கப்படாதுன்னு அப்பா சொல்லிருச்சு”.
அம்மாவுக்கு மொகம் முதுகெல்லாம் காயமாகி இரத்தம் வழிஞ்சிச்சு. அன்னைக்கு பூரா பக்கத்து வீட்டிலேயே இருட்டுற வரைக்கும் அழுதுக்கிட்டிருந்திச்சு.
அதுக்குப் பிறகு அம்மாவைப் பார்க்க முடியல. அப்பாவோட மொகத்தல சந்தோசத்தைப் பார்க்கனுமே அடுத்த ஒரு மாசம் கூட முழுசா முடியலை… சித்தி நிரந்தரமா வீட்டுல தங்கிருச்சு.
ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடம் முன்னால விளையாடிக்கிட்ழருந்தேன். எங்கிளாசு செல்லபாண்டி வந்து சொன்னான் எங்கம்மா…பேய் இருக்கிற புளியமரத்துகிட்ட நிக்குதுன்னு. எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.
மத்தியான ‘உரிமை’ நேரத்துல அங்க நின்னா பேயடிச்சிடாதா?. அம்மாவை நெனச்சு மரத்துகிட்ட ஓடினேன். கலங்கின கண்ணோட அம்மா நின்னுக்கிட்டிருந்திச்சு. என்னை அப்படியே தூக்கி முத்தம் கொடுத்திச்சு.
எனக்கு பிடித்த கம்மார் கட்டு… தேன்மிட்டாய்… கடலைமிட்டாய்… எள்ளுருண்டை… வாங்கி வந்த எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்து நான் திங்கிறதைப் பார்த்துகிட்டேயிருந்திச்சு.
என்னைப் பார்த்த விசயத்தை அப்பாகிட்ட சொல்ல வெண்டாம். தெரிஞ்சா உன்னையும் அடிப்பாருன்னு சொல்லிட்டு அழுகையோட போயிடுச்சு.
நான் புளியமரத்தோட உச்சியைப் பார்க்கிறேன். பேயைக் காணோம். ஆனாக்கூட எனக்குள்ள ஏதோ பயம் வர ஓடிவந்திட்டேன். அப்புறம் மறுகெழமைதான் அம்மாவைப் பார்த்தேன். தீனிச் சாமானோட வந்து நிக்கும். என்னை வாரி அணைச்சு மடியில தூக்கி வச்சிகிட்டு எடுத்துக் குடுக்கும். மரத்தொட வேர்லதான் சாஞ்சு ஒக்காந்திருக்கும். மரத்த நாலைஞ்சு பெரு கட்டிப் பிடிச்சாக்கூட முடியாது. பெரிய மரங்கிறதால அந்தப் பக்கம் நிக்கறத இந்தப் பக்கம் நிக்கிறவங்க பார்க்க முடியாது. இருந்தாலும் அம்மா அப்பப்ப எட்டிப் பார்த்துக்கும். அந்த மரத்துல தூக்கு போட்டுகிட்டு தொங்குன மாரியம்மா ஊரையே பயமுறுத்திக்கிட்டிருந்திச்சு. அந்த மரத்தைக் கண்டு ஊரேபயந்து கெடக்க நானும் அம்மாவும் மட்டும் மரத்தோட வேர்ல கெடந்தோம். எல்லா நேரமும் புளியமரத்து நெனப்போடயே இருந்தேன். கண்ணுக்குள்ளே மரமிருந்தது. ஆனா அம்மா வர்றதுதான் திடீர்னு நின்னு போச்சு.
எனக்கு அதுக்குப் பிறகு உலகமே இருண்டு போன மாதிரியாகிப் போச்சு. பொழுது விடிஞ்சு பொழுது சாய்ற வரைக்கும் புளியமரமே கதியா கெடந்தேன். அப்பாவுங்கூட பேய் அடைஞ்சு கெடக்கிற புளியமரத்துக்கிட்ட என்னடா வேலைன்னு? அதட்டினாரு. எனக்கு ஊர்ல இருக்கவே புடிக்கல.
டவுனுக்கு போய் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கறேன்னு அழுது அடம்புடிச்சு காலேஜ்வரைக்கும் போய்ட்டேன்.
இன்னிக்கு வருசம் நெறைய்ய ஓடிப்போச்சு. பைனல் இயர் பரீட்சையல்லாம் முடிச்சு ஊருக்கு வந்ததுல புளியமரத்தைக் காணோம். மைதானம்தான் தெரியுதுது. பள்ளிக்கூடம் மாடியா வளர்ந்து நிக்குது. பரீட்சை ரிசல்ட்டும் வந்திருச்சு. டவுன்ல அப்பாவுக்குத் தெரிஞ்ச எலக்ட்ரானிக் கடையில சேல்ஸ்மென் வெலையும் கிடைச்சிடுச்சு.
இவ்வளவு பெரிய மனுசனா வளர்ந்து நிக்கிற என்னை அம்மா இருந்து பார்த்திருந்தா?….. என்னையறியாமலேயே கண்ணீர் வருது.
அப்பா… சித்தி… பக்கத்து வீட்டாரெல்லாம் புத்திமதி சொல்லி பயணம் அனுப்புகின்றனர். யாரு முகத்தையும் பார்க்க முடியல. ரவியோட யமஹா பைக்குல சூட்கேஸ் பெட்டியுடன் ஏறிக்கிறேன்.
ஆரம்ப பள்ளியின் காம்பவுண்ட் வந்தவுடன் நிறுத்தச் சொல்றேன். நான் நடந்தே வருவதாகச் சொல்ல அவன் எவ்வளவோ கெஞ்சியும் அவனை அனுப்பிவிட்டு அங்கேயே நின்று மைதானத்தைப் பார்த்தேன். மைதானத்தின் நடுவில் அந்த பேய்மரம் எனக்குள்ள தெரியுது. அம்மா கையை காட்டிகொண்டு நிக்குது. அம்மா சிரிக்குது, அழுகுது அது சந்தோசத்தின் அழுகையா எனக்கு தோணுது. எனக்கும் சந்தோசமா கண்ணீர் வருது.
—————————————————————தவமுதல்வன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s