கவிதைகள்

கவிதைகள்
திரு நம்மாழ்வார் அவர்களுக்கு கவிதாஞ்சலி

உதகையின் தாவரவியல் புல்வெளிகளே
மரங்களே மலர்களே
புல்பூண்டுகளே
மண்ணே ,உள்ளேயிருக்கும்
புழுக்களே , குப்பைகளே
வணக்கம்

இன்னும் யார் யாரை…
எல்லாமோ தேடிபோனேன்
கவிதை அகப்படவில்லை !

பருவம் பொய்த்தது
மழை பொய்த்தது
விவசாயம் பொய்த்தது
உன்மரணம் பொய்த்திருக்க கூடாதா ?

புல்பூண்டு முதல்
மரங்கள்வரை கண்ணீர் சொரிகிறதே
நான் அதை ஊட்டியின் நீர் பனி என்றா கூறுவேன் !
இல்லை இல்லை
மனிதபச்சையமே உன்னை இழந்த
துக்கத்தின் கண்ணீர் துளிகள் அது !

நாங்கள் சிலரை அற்பபுழு என்போம் ;
சாணியில் மிதிக்க நேர்ந்தால் கூட
தீட்டு பட்டதாக பதறிபோவோம் ;
குப்பைகளை குப்பை என்றே கூறி பழகிபோனோம் .

நீதானே புழுவை உழவனின் தோழனாக்கினாய் ,
நீதானே சாணியை நாட்டின் உரமாக்கினாய் ,
நீதானே குப்பைகளை தழை சத்தாக்கினாய்
இதைவிடவா மண்ணின் கவிதை பற்றி எழுதமுடியும் !

ஏகாதிபத்திய நிறுவனங்களின்
நவீனரக கள்ளகுழந்தைகளின்
வளரும் இடமாக வேளாண் பல்கலைகழகங்கள்
மாறியபோது

நீதானே நம்மூர்
முத்துபேச்சி ,பாப்பாத்தி கிழவி ,
மாரியம்மாள் பாட்டிகளின் கையாக நீண்டு
நில உடலை தடவி ,
வெள்ளை நாய்களின் குழந்தைகளுக்கு
இடம் இல்லை இங்கே என ,
இனம் காட்டி .மரபு போற்றி – உன் வேலையைக்கூட
உதறி எரிந்தாய் !

மண்ணே ,நெற்குதிரே
கழனிகளே
உங்கள் – எங்கள் மருத்துவனை
எப்போது காண்போம் !

இந்த மண்ணின் பச்சை உடை
மருத்துவனே எம் தலைமுறை எப்படி
காப்போம் !

மனிதர்கள்மேல் போடப்பட்ட
இரசாயன குண்டுகளினால் ஒன்றரை இலட்சம்
உறவுகளை இழந்தோம் ஈழத்தில் !
எம் மண்ணில் தூவப்பட்ட இரசாயன உரங்களால்
ஒன்றரை இலட்சம் விவசாயிகளை இழந்தோம்
இந்தியாவில் ?

பெருத்த ஓசையுடன் ,
கனரக ஏவுகணை களுடன்
நடை பெற்றால்தான் போரா ?

மண் விடுதலை கேட்டவன்
முள்வேலி உள்ளேயும்
மண்வளம் கேட்டவன்
‘ரியல் எஸ்டேட் ‘ வேலிகளின் வெளியேயும்
நிற்பவர்களை யார் காப்பது ?

தாவரங்களின் வாழ்வியல் ;
உழவனின் உயிர் ஆதாரம் ;
எம் பசியின் உணவு ;
எல்லாம் வேர்களை ஆராதிப்பதிலிருந்து
தொடங்க கற்று கொடுத்தவனே ….

எம் தேசத்தின் விதை நெல்லான
விவசாயிகளின் மணி நெற்குதிரே …
பசுமை களின் பச்சை உடலே ..

தேடி பார்கிறேன் ….கவிதை வரவில்லை
தலை சாய்த்து நிற்கும்
நெற்கதிர் வயல்களில் …
கவிழ்ந்து கிடக்கும் கத்தரி பூக்களின் வண்ணங்களில் ..
உழவனின் கழனியில் ..
சூலலியலாலரின் நாட்குறிப்பில் ..
பறவைகளின் அலகில் இருக்கும் புழுவில் ..
ரீங்காரம் இடும் வண்டுகளின் ஓசையில்
நீ வாழ்கிறாய் !
நவ சீனத்தின் மலைகளையே கைப்பற்றி
நடந்த அந்த கிழவரும் ,

எம் வாழ்வில் -பண்பாட்டு வேர்களில்
கலந்த ஆரிய நச்சு கிருமிகளுக்கு
‘பாலிடாயில் ‘ தெளித்த ஈரோட்டு கிழவரும் ,

மண்ணை பொதுவாக்க தன்னையே இழந்த
ஜெர்மானிய கிழவரும் ,

மண்வளம் காக்க புழுவிற்கே
இரையான நீயும் எங்களுக்கு ஒன்றுதான் !

உம் நீண்ட பயணத்தில் பாதம் பட்ட
இடங்களில் இருந்து முளைத்த
இளங்குருத்துக்கள் நாங்கள் பயணத்தை
தொடர்வோம் !

உன்னை மட்டுமே
உலகமயபடுத்துவோம் !

( கடந்த வாரம் இயற்கை விஞ்ஞானி திரு நம்மாழ்வார் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கவிதாஞ்சலி யில் உதகை தாவரவியல் பூங்காவில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை )
———————————————————————————————————————————-

பல சாதிகள் சேர்ந்து
பாத்தியிட்ட தேயிலை – வாழ வைத்தது
மலையக மக்களை ஒரு சாதியாய்
தொழிலாளியாய்

இப்போது உலகமயம் பொருக்கியெடுத்த
தேயிலை கொழுந்துகளில்
கழித்து போட்ட முற்றிய காம்புகளாய்
சமவெளியில் தோட்டதொழிலாளி

இந்த நிலத்தின் சரிவு
மழையால் …மண்ணால்
மட்டும் என்பது இயற்கையின் விதி
பொருளாதார அதிர்வின் ரிக்டர் அளவுகள்
கூடிக்கொண்டு போவதை உற்று பார் தெரியும்
நாளும் நடக்கும் புலம் பெயர்வுகள் – இது
உலகமய அதிர்வின் செயற்கை மலைசரிவு .

சாதிகளை கடந்து சண்டையிட்டு
புறம்போக்கு நிலத்தில் பதியமிட்டோம்
நமது காலனிகளை – இப்போது
சில ‘ புறம்போக்குகள் ‘ வருகிறது
சாதி சங்கம் வைக்க .

சூரியனை எழுப்பி – வரும்
நிலவிடம் ஒப்படைக்கும் தோட்ட இடைவேளை
நேரங்களில் …
நிரைகளில்
காலத்தை வென்றோம்
சமத்துவமாய் கை கோர்த்து !
இப்போது மானுவேர்களை குதற
வாங்கு தோண்ட வருகிறது சாதி எலிகள்

சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்த
ஜனநாயக படுகொலையில் – நடை
பிணமாய் போனவர்களை
ஒப்பாரி கோட்சிதானே ‘
உழைப்பாளியாக சுமந்து வந்தது
நமக்குள் எப்போது வந்தது சாதி ?

-சுமங்கலி வலையில் வீழ்ந்த
எம் கன்னி பெண்களின் சுவாசங்களில்
குடிபுகும் பஞ்சுநூல்
கருவையே கறுவருப்பதை
எந்த சாதி காப்பாற்றும் ?

தங்கத்தை கொண்டும் – எழுதாத மொய் ஏட்டின்
பின்குறிப்பில் இழிபிறவியாக உறவுகளை
கூறுபோடும் சொந்தங்களின் மத்தியில்
அக்கரையிலும் இக்கரையிலும்
வர்க்கமாய் வாழும் நம் லயங்கள் – காலனிகள்
நூற்றாண்டு சமத்துவ கோபுரங்கள் !

யார் யாரோ சாதி சங்கம் வைத்திருக்கிறான்
நமக்கும் ஒன்னு வேணும்
நம்ம சாதி பெரிய சாதி ”

என்று பேசுபவர்ளை பார்த்து – இனி
தேயிலை நிறைகள் வெட்கப்படும் ;

தோட்டங்களில் அனாதையாய் கிடக்கும்
தேநீர் அடுப்புகள் முதல் முறையாய்
வெப்பம் உணரும்

உழைப்பின் திறனை எடைபோடும்
கொழுந்து திராசுகள் முதன் முறையாய்
மனிதர்கள்மேல் நம்பிக்கை
இழக்கும்;

தோட்டத்தில் தேநீருக்கு நீர் சுரந்த ஓடைகளும்
தொழிலாளி களாய் பார்த்து
நிழல் தந்தஒற்றை மரங்களும்
விலங்குகளே பரவாயில்லையென
முடிவுக்கு வரும்

செம்மறி ஆடுகளாய் உருமாறிய
உறுப்பினர்களை விடுங்கள் ,
அவர்கள் தேர்தல் பலிபீடத்தின் ஆடுகள் ;
நரிகளின் பின்னே போகும் நண்டுகள் .

வர்க்கமாய் சாதித்தவற்றை
சாதியால் வீழ்த்த வரும்
ஓநாய் களை விரட்டி யடியுங்கள் .

ஈழத்தில் அறிவிக்கப்பட்ட முல்வேளிக்குள்ளும்
இங்கே பெரும் தோட்ட வேலி களுக்குள்ளும்
அடை பட்டவர்களை
விடுவிக்க வாருங்கள் .

நமக்கு கிழக்கின் வெளிச்சமே
இருளை போக்கும்
வாருங்கள் சொர்க்கம் சமீபத்திருக்கிறது
வர்க்கமாய் இணைவோம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s