கட்டுரைகள்

index

 

தமிழ் திரை உலகின் தனித்த ஆளுமையான அய்யா பாலுமகேந்திரா வின் இழப்பு ஈடு செய்ய முடியாது . இனம் ,மதம் ,மொழி, சாதி என எந்த வட்டங்களுக்குள்ளும் தன்னை குறுக்கி கொள்ளாமல் திரை மொழியின் காட்சியை, ஒளியை முதன்மையாக கொண்டவர்.அதில் அவர் தொடங்கிய பயணம் ( யாத்ரா ) ,அவர் கட்டிய வீடு .அவர் பாடிய சந்தியாராகம் ,அவர் போட்ட அழியாத கோலங்கள் ,அவர் பார்த்த மூன்றாம் பிறை , யதார்த்தத்தை மீறாத ரெட்டைவால் குருவி ,சதிலீலாவதி ,மூடுபனி , மீண்டும் கோகிலா . அவர் ஒளிபதிவு செய்த முள்ளும் மலரும் என சொல்லிக்கொண்டே போகலாம் . எங்கள் ஊரின் அழகை அவர் காமெராவின் கண்கள் வழியாக பார்த்த இந்த ‘தலைமுறைகள் ‘ உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் . உதகையின் அதிகாலை புல்வெளிகள் . வனங்களின் தாவரங்களுக்குள் ஊடுருவும் சூரியனின் கதிர்கள் . ஓடைகள் , அருவிகள் , ஆறுகள் ,யுகலிப்டஸ் மரங்கள் , தும்பிகள் .பனியின் துளிகள் ,படரும் மேகங்கள் …ரயில் தண்டவாளங்கள் , கேத்தி ரயில் நிலையம் …இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .கதைகளை கலா பூர்வமாகவும் ,இலக்கியபூர்வமாகவும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் ‘மறுபடியும்’மறுபடியும் உண்மைகளை சொன்னவர் . இருண்மைகளை புறம் தள்ளி எளிமைகளை முன்னெடுத்தவர் .எல்லா மக்களுடைய கனவும் சொந்தமாக ஒரு வீடுதான் . ஒரு நடுத்தர குடும்பம் வங்கி கடன் வாங்கி வீடு கட்ட முற்பட, மேஸ்திரி திருட்டுத்தனம் , வங்கி அதிகாரியின் முறை கேடுகள் என எல்லாம் சேர்ந்து வீடு பாதியிலேயே நின்றுவிட சமூகம் சித்தாள்தானே என யாரை கேவலமாக பார்க்குமோ அங்கே சித்தாளாக வேலை செய்யும் பசி சத்யாவை வைத்து வீட்டாருக்கு நம்பிக்கை கொடுத்து வீட்டை கட்டுவார்.சித்தாளை சக மனுசியாக ,சமூகத்தின் இயக்கம் தெரிந்தவளாக ,கம்பீரமானவராக சித்தாள் வாழ்ந்திருப்பாள் . என்னை பொருத்தவரை நாயகியாக சித்தாள்தான் தவறான அனுமதியால் கட்ட நின்றுபோன அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . நான் சாலிகிராமம் வழியாக செல்லும் போதெல்லாம் அங்கே அவர் வீட்டில் சித்தாள் வாழ்வதாகவே எண்ணி எட்டி பார்ப்பேன் . இந்த சமூகத்தின் வணிக சினிமாவின் முன்னால் அவரின் ‘வீட்டை’ போலவே தான் நல்ல சினிமாவை காட்சியால் கட்டினார் . அவர் இன்று இல்லை சித்தாள் பசி சத்தியாவின் பாத்திரம் போல நமக்கு அவர் படங்கள் உள்ளன . காலம் உள்ளவரை அந்த கலைஞனை மறவாதிருப்போம் .என் ஆழ்ந்த இரங்கல் !

————————————————————————————————————————–

 

—–DSC03090DSC03091

DSC03092DSC03093

DSC03094DSC03095

DSC03098DSC03099

DSC03101DSC03102

DSC03103DSC03104

DSC03105DSC03106

கட்டுரைகள்

என்று நிற்கும் இந்த அவலம்

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படங்கள் ஈழத்தில் நடந்து முடிந்த போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தோ , ‘மதயானைகூட்டம் ‘ தாக்குதலால் , சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட இடங்களில் இருந்தோ எடுக்கப்பட்ட படங்கள் அல்ல இவை . நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள பர்ன்சைடு என்கிற தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டி குடியிருந்த தோட்ட தொழிலாளிகளின் வீடுகள் இவை . நாற்பது வருடங்களுக்கு மேல் ஆறு .மற்றும் ஓடை பகுதிகளில் தாங்களாகவே கட்டிக்கொண்ட வீடுகள் இவை .குடிசை, மண்வீடு , தகரவீடு , ஓட்டு வீடு என குருவி கூடு கட்டுவதைபோல கட்டப்பட்ட வீடுகள் இவை .நேற்று மாலை அந்த தோட்டத்தின் பகுதி முழுதும் கண்ணீரும் .கதறலுமாக , ஒப்பாரியாக மரண ஓல சத்தம் நிலவ அவர்கள் கண் முன்னே அரசு அதிகாரிகள் . தோட்ட நிர்வாக உதவியுடன் இடிக்கப்பட்டது .உடலை மூலதனமாக கொண்டு உழைப்பை மட்டுமே நம்பி இந்த மலைக்கு வந்தவர்களுக்கு கிடைத்த இடங்களே அவை . பள்ளி ,கல்லூரி போகும் இன்றைய இளைய தலை முறையினர் ” நேற்று இரவு கொட்டும் பனியில் தேயிலை காட்டில் எஞ்சிய பொளுளை பாத்துகிட்டு கிடந்தோம் ” என்று கண்ணீர் மல்க கூறியபோதும், ” ஏதோ கொஞ்சம் நாங்களும் இந்த ஊர்ல பிழைச்சிகிட்டோம் என நம்பிக்கையாக இருந்தோம் எல்லாம் போச்சி ” என வாழ்வின் நம்பிக்கை தகர்ந்து பேசியபோதுநமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை . சுற்றுசூழல் பாதுகாப்பு , ஆறு ஓடைகள் ,நீர்பிடிப்பு பகுதிகள் பாதுகாப்பு என அரசு காரணம் சொல்லி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நியாயமான காரணம் இருப்பதுபோல , தொழில் , பிள்ளைகளின் கல்வி ,ஒன்றாக சேர்ந்து வாழும் நிலை போன்றவற்றால் மாற்று இடங்களுக்கு தொழிலாளிகள் போக மறுப்பதற்கும் காரணங்கள் உள்ளன .தொழிலாளிகளிடம் இப்படி கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் சட்டம் தன் கடமையை செய்வதாக சொல்லும் இவர்கள் வனத்தை ஆக்கிரமித்து … குடியிருப்புகளையும் கட்டியிருக்கும் தோட்ட நிர்வாகதின்மேல் எந்த நடவடிக்கையும் இல்லையாம் .தங்களை இப்படி காலி செய்ய அதிகாரிகள் நடந்துகொள்வதற்கு தோட்ட நிர்வாகமும் உடந்தையாக இருப்பதாக பலரும் வேதனையில் கூறுகின்றனர் .மீண்டும் பழைய நிலைமைக்கு போன தங்கள் வாழ்வை இனி மீட்டு எடுப்பது எளிதான காரியம் இல்லை . இருப்பினும் பிள்ளைகளின் கல்வி . அவர்களில் வேலை பாதிக்காத வகையில் அங்கேயே மாற்று இடம் கொடுத்து அரசே வீடும் கட்டி கொடுக்க வலியுருத்துவொம் . பல நூற்று ஆண்டுகளாய் தொடரும் இந்த அவலம் நிற்பது எந்நாளோ .?????

———————————————————————————————————————

புலி தாக்குதல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புலியால் தாக்கப்பட்டு இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர் . மேலும் பலரை தாக்கக்கூடும் என்கிற அச்சமும் ,பீதியும் தொட்டபெட்டா வை ஒட்டியுள்ள கிராமங்களான ..தூனேறி , இடுஹட்டி . குந்தசப்பை , அகலார் , கொதுமுடி என இருபத்தைந்து கிராமங்களை கவ்வி உள்ளது . பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ,வனத்துறை காவல்துறை கூட்டு நடவடிக்கையும் ,தேடுதல் வேட்டையும் தொ…டர்கிறது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது , சுட்டு கொள்வது என இருவேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகின்றன .பெரும்பாலான மக்கள் புலியை சுட்டுகொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதை அவர்களின் கோபத்திலிருந்து உணர முடிகிறது. விலங்குகளால் எந்த மனித உயிரும் பலியாவதை நான் ஆதரிக்கவில்லை. அதே வேலை, மலை மாவட்டமான ,நீலகிரி ,வால்பாறை போன்ற இடங்களில் இது தொடர் நடவடிக்கை தான் . யானை .சிறுத்தை , காட்டுஎருமை போன்ற விலங்குகளால் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பலியாகாத ஆண்டுகளே கிடையாது . குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பின் , ரியல் எஸ்டேட் தொழிலின் விரைவான வளர்ச்சிக்குபின் மலைகளை குறி வைத்து அதன் ‘ உல்லாச தேடலின் ‘ ‘அமைதியின் உறைவிடமாக ‘ திகழ ஆரம்பித்தது . தனியார் மயத்தின் தரகர்கள் , ‘பெரும்புள்ளிகள் . ரியல் எஸ்டேட் அதிபர்கள் . திரைப்பட நட்சத்திரங்கள் போன்றோரின் அந்தப்புர இடங்களாக மாளிகைகள் , ரிசார்ட்டுகள் . சுற்றுலாவாசிகளின் விடுதிகள் வனத்தை நோக்கி நகர்ந்தன .பார்வைக்கு வானம்போல தோற்றமளிக்கும் பல இடங்களில் உள்ளே புகுந்தால் பல ‘வெள்ளைமாளிகைகளை ‘ காண முடியும் . அதை சுற்றி மின்வேலிகள். சில இடங்களில் ஓடைகளை மறித்து கட்டிடங்கள்; பொய்க்கும் பருவமழை; வறண்டு வரும் நீர்நிலைகள் ; அழிந்துவரும் விலங்குகளின் உணவான புல்லினங்கள் ; இவை எல்லாம் வனத்தை விட்டு விலங்குகள் வெளியில் வர காரணங்களாக உள்ளன . அவைளை தடுக்கவும் ,மனித உயிர் பலிகளை நிறுத்தவும் வேண்டும் கீழ் கண்ட நடவடிக்கைகள் முக்கியம் என கருதுகிறேன் .

1. வனத்தை ஒட்டி உள்ள விடுகளை ரத்து செய்து, ஆக்கிரமிப்பாளர்களின் கடுமையான நடவடிக்கை எடுப்பது

2.சுற்றுலா என்கிற கருத்தாக்கத்தை நிறுத்தி முதுமலை போன்ற இடங்களுக்குள் பொதுமக்களை அனுமதிப்பதை நிரந்தரமாக நிறுத்துவது .

3, நிரந்தரமாக தாங்காமல் வெறுமனே கட்டிடம் கட்டி வைப்பதை அனுமதிக்காமல் இருப்பது .

4. வனங்களுக்குள் விலங்குகளுக்கு தேவையான நீர் தொட்டிகளை உருவாக்குவது .

5.விலங்குகளுக்கு தேவையான பழ ,புல் மரங்களை வளர்ப்பது .

6. மனிதர்களை பலிகொண்ட புலியை மயக்க ஊசி செலுத்தி ,பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விடுவது .

இவை என் தாழ்மையான கருத்துக்கள் .
——————————————————————————————————————————–

ஆசாமிகள்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இங்கிருந்துதான் அரிசி ,பருப்பு ,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்வது எல்லோரும் அறிந்ததே . கள்ளத்தனமாக கடத்தப்படும் ரேசன்அரிசி தமிழக -கேரளா எல்லையான கோவை வாளையாரில் சோதனை சாவடியில் அடிக்கடி பிடிபடுவதை செய்தி ஏடுகளில் படித்திருப்பீர்கள் . நிலைமை இப்படி இருக்க, முல்லை பெரியார் அணை யிலிருந்து நமக்கு தண்ணீர் தர மறுத்த கேரளாவுக்கு எத…ிராக கொந்தளித்த ‘இனஉணர்வாளர்கள் ‘ பலர் பக்தியின் பெயரால் சபரிமலைக்கு இடுமுடியில் பதுக்கி தலைக்கு ரெண்டு கிலோ வீதம் பல லட்சம் கிலோ அரிசி கடத்த புறப்பட்டுள்ளனர் .

எங்கள் ஊரில் தாயகம் திரும்பிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மதுக்கடை , மருத்துவமனை , மேல்மருவத்தூர் , கந்துவட்டி போன்றவற்றிற்கு ‘அழுதது ‘ போக குருவிபோல சேர்த்த சீட்டுப்பணம் , மேலும் கந்துவட்டி …இதுபோக ‘கைமாத்து ‘ வாங்கிகொண்டு வருசம்பூர ஏறுகிற மலை போதவில்லை என்று சபரி மலைக்கு கிளம்பிவிட்டனர் . இதில் இலங்கை இலிருந்து இங்கு வந்து தங்கி பல ஆசாமிகள் போகின்றனர் .

இத பார்க்கும்போது எனக்கும் மனசு புண்படுது .
———————————————————————————————————————————

இரண்டு ஆளுமைகள்

இந்த வருடத்தின் முன்பனி காலத்தில் கடல் கடந்து இரண்டு ஆளுமைகளை சந்திக்க நேர்ந்த்தது . ஒன்று நான் நீண்ட நாளாக அவதானித்து வந்த வல்லினம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரும் , எழுத்தாளருமான நண்பர் கே .பாலமுருகன் அவர்கள். இன்னொன்று பள்ளிக்காலம் தொட்டு நான் தேடி தேடி வாசித்து வருகிற எங்கள் மலையகத்தின் எழுத்து ஆளுமை அய்யா எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள். நண்பர் பாலமுருகன…ோடு ஒரு நாள் முழுதும் குன்னூர் தொடங்கி மலை ரெயிலில் பயணித்து கொண்டே மலேசியாவின் இலக்கிய செயல்பாடுகள் , மக்களின் வாழ்வியல் ..தமிழ் தேசிய போராட்டங்களின் நிகழ்வுகள் ..எதிர்வினைகள் …உணர்ச்சிகர கோசங்கள் … போன்றவை குறித்து விரிவாக பேச முடிந்ததது … அரசியலிலும் இலக்கிய செயல் பாடுகளிலும் எனது நிலைபாடுகளை அவரும் இணக்கமாக கொண்டிருந்த்தது கொண்டிருந்ததது மகிழ்வை தந்தது .அவரின் படைப்புகளான சிறுகதை .கவிதை என இரண்டு நூலின் சொற்களோடு மலேசியாவை,வாழ்வை காணுகிறேன் . தன் அனுபவத்தில் கண்ட வாழ்வை , சிக்கலை . நுட்பமான உண்மைகளை அதில் காண்கிறேன் ….விரிவாக பயணித்து எழுதுவேன் ….நன்றி 2013 வருடத்தின் முன்பனி காலமே .

——————————————————————————————————————————-

சாதி நம்மை பிடித்த பெரும் வியாதி

இனிமே அந்தம்மா காபி வாங்கிவந்த குடிக்க மாட்டோம் . நாங்க வேற அவங்க வேற ” என்று இருபது வருடமாக ஒன்றாக இருந்த தேயிலை தோட்ட தொழிலாளியான பெண்கள் பிரிந்து விட்டதாக
அந்த தோட்டத்தின் இன்னொரு பணியாளர் கூற வந்த வேதனை இன்னமும் சீரணிக்க முடியவில்லை . இன்னும் சில
இடங்களில் …” சாவுக்கு அவங்களுக்கு சொல்லகூடாது , நாமளும் யாரு வீட்டுக்கும் போக கூடாது , ஒரே பூசாரி வைக்க கூடாது , நாமளும் அப்படி நம்ம ஆளுகள தவிர யாரு வீட்டுக்கும் போககூடாது ” இப்படி மலையக மக்கள் மத்தியில் விஷம் பரவ ஆரம்பித்திருக்கிறது . குறிப்பாக தாயகம் திரும்பியோர் அதிகம் செறிந்து வாழும் கூடலூரில் . இப்படி பேச வைத்தது யார் தெரியுமா ? ‘ ஈழத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருப்பவர்கள் ‘ ‘அண்ணன் வழியே எங்கள் வழி ‘ புலியை முறத்தால் அடித்து விரட்டிய ….புறநானூற்று வீரம் பேசியவர்கள் .அடுத்த கட்ட போருக்காக தயாராக இருப்பவர்கள் ‘- நீலகிரி மாவட்ட தமிழ் சங்கம் .

சாதிகறை படியாமல் ஒற்றுமையாக இருந்த மக்களை முத்திரையர் சாதிசங்கதின் பெயரால் கூறுபோட ஆரம்பித்திருக்கின்றனர் . நேற்று புலிக்கொடி : இன்று சாதிசங்கசிங்ககொடி ; நேற்று தமிழினம் இன்று முத்திரையர் இனம்;
நேற்று ஓவியர் புகழேந்தி , கவி அறிவுமதி , கவி காசி ஆனந்தன் . பாவணன் .ஆகியோர் விருந்தினர் இன்று பா .ம .க பேச்சாளர் ; என்ன செய்யலாம். என் உறவுகளேயே உதறி துண்டறிக்கை …. கண்டன கூட்டம் என எதிர்வினை தொடர்கிறது . எல்லாம் தோழமை சார்ந்த உறவுகளின் மேல் … புத்தகம் .. எழுத்து …. மேல் உள்ள நம்பிக்கை தான்

————————————————————————————————————————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s